2,407 ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியீடு!

By காமதேனு

பள்ளிக்கல்வித்துறையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் 2,407 பேர் நியமனம் செய்வதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது எனவும், ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் திருத்தப்பட்ட ஆண்டு கால அட்டவணையை வாரியத்தலைவர் லதா வெளியிட்டுள்ளார். அதில், "பள்ளிக்கல்வித்துறையில் 2,407 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர் தகுதித்தேர்விற்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்டு, அவர்களுக்கான தேர்வுகள் ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் வெளியிடப்படும்.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 155 விரிவுரையாளர்கள் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியிடப்பட்டு, அக்டோபர் மாதம் தேர்வுகள் நடத்தப்படும். பட்டதாரி ஆசிரியர் பணியில் 1,874 பேர் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டு, டிசம்பர் மாதம் தேர்வுகள் நடத்தப்படும். இடைநிலை ஆசிரியர் பணியில் 3,987 பேர் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டு, டிசம்பர் மாதம் தேர்வுகள் நடத்தப்படும்.

அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் 1,358 காலிப் பணியிடங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் 493 காலிப் பணியிடங்கள், அரசு பொறியியல் கல்லூரிகளில் 97 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வரவில்லை. அரசு அனுமதி அளித்த உடன் அறிவிப்புகள் வெளியிடப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE