நள்ளிரவில் அடித்து நொறுக்கப்பட்ட வீடுகள்… ஆயுதங்களுடன் நுழைந்தவர்களால் அதகளமான மீனவக் கிராமம்: நாகூரில் அதிரடிப்படை குவிப்பு

By காமதேனு

மீன் விற்பனை மற்றும் மீன் பிடிப்பது குறித்த பிரச்சினையால் இரண்டு மீனவ கிராமங்களிடையே மோதல் நடைபெற்றது. இதன் விளைவாக வீடுகள் சூறை, சாலை மறியல் என நாகூர் நகரமே நேற்று இரவு பெரும் பரப்புக்கு உள்ளானது.

நாகை அருகே உள்ள நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதற்கும், மீன் ஏலம் விடுவதற்கும் மேலபட்டினச்சேரி மற்றும் கீழபட்டினச்சேரி ஆகிய இரண்டு மீனவர் கிராமங்களுக்கு இடையே வெகு நாட்களாக தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. மீன்பிடி தடைக்காலம் முடிந்து தற்போது மீனவர்கள் கடலுக்கு சென்று வரும் நிலையில் அந்த கருத்து வேறுபாடு, சிறு சிறு மோதல்களாகவும் உருவெடுத்துள்ளது.

அதனால் இந்த பிரச்சினையில் தலையிட்ட மாவட்ட நிர்வாகம் இரண்டு கிராமத்தினரையும் சமாதானப்படுத்தி நாகூர் துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதற்கு சம்மதிக்க வைத்தனர். ஆனாலும் கீழ்ப்பட்டினச்சேரி மீனவர்கள் இதற்கு முழுமையான சம்மதம் தெரிவிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மேலபட்டினச்சேரியைச் சேர்ந்த சுரேஷ் உள்ளிட்ட சிலரை ஒரு பிரிவு மீனவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்த மேல பட்டினச்சேரி மீனவர்கள் நாகப்பட்டினம் - சிதம்பரம் சாலையில் திரண்டு வந்து நாகூர் வெட்டாற்று பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் சாலை மறியல் செய்து கொண்டிருப்பது அறிந்த எதிர்தரப்பு மீனவர்கள் ஆயுதங்களுடன் மேலப்பட்டினச்சேரி கிராமத்திற்குள் சென்று வீடுகளையும், வெளியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் தாக்கி சேதப்படுத்தினர். இதில் இருபதுக்கு மேற்பட்ட வீடுகள், மற்றும் இருசக்கர வாகனங்கள் பலத்த சேதத்திற்கு உள்ளாகின.

இந்த தகவல் அறிந்து அங்கு சென்ற அதிரடிப்படையினர் தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். அத்துடன் இரவோடு இரவாக அவர்களில் 15 பேரை கைது செய்தனர். மேலும் மோதல் தொடராமல் இருக்க இரண்டு மீனவ கிராமங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோதல் மற்றும் சாலை மறியல் சம்பவங்களால் நாகப்பட்டினம் மற்றும் நாகூர் பகுதியில் நேற்று இரவு பெரும் பதற்றம் நிலவியது. போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE