சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தனியார் பள்ளியிலிருந்து அரசு பள்ளிக்கு மாறிய மாணவர்களுக்கு, அப்பகுதி கிராம மக்கள் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி சீர்வரிசை வழங்கி கவுரவித்தனர்.
காரைக்குடி அருகே பாடத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 72 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதனிடையே, பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க கிராம மக்கள் மற்றும் ஆசிரியர்கள் முடிவு செய்தனர். அதன்படி, அருகில் இருக்கும் கிராமங்களுக்கு சென்று பெற்றோர்களிடம் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க பரிந்துரை செய்தனர்.
இந்த முயற்சியின் பலனாக தற்போது புதிதாக தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 17 மாணவர்கள் அரசுப்பள்ளியில் சேர்ந்தனர். இதையடுத்து, அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களை கவுரவிக்கும் விதமாக பாடத்தான்பட்டி கிராம மக்கள் சார்பாக இன்று விழா நடத்தப்பட்டது. அப்போது, கல்வி சீர்வரிசை வழங்கும் விழாவும் நடந்தது.
விழாவில் கலந்து கொண்ட ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து கவுரவித்தார். வெளியூரில் இருந்து பள்ளி வந்து செல்லும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 15 மாணவர்களுக்கு கிராமமக்கள் சார்பில் 1 லட்சம் மதிப்பில் கல்வி சீர்வரிசையாக சைக்கிள்கள் வழங்கப்பட்டன. அவற்றை மாணவர்களுக்கு அமைச்சர் வழங்கினார்.