புதுடெல்லி: முதுநிலை மருத்துவப் படிப்புக்கு தகுதித் தேர்வான நீட் தேர்வு வரும் ஆகஸ்ட் 11ம் தேதி இரண்டு ஷிப்டுகளாக நடைபெறும் என மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் (என்பிஇஎம்எஸ்) அறிவித்துள்ளது.
சமீபத்தில் நீட் உள்ளிட்ட தேசியத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஜூன் 23ம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. நாடு முழுவதும் உள்ள சுமார் 52 ஆயிரம் முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு செயல்முறையின் வலிமையை சரிபார்க்கவும், நடைமுறையில் எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதிசெய்யவும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விரும்பியதால், முன்பு வெளியிடப்பட்ட முதுநிலை நீட் தேர்வு அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து அறிவிப்பு அத்தேர்வை எழுதவிருந்த மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வரும் ஆகஸ்ட் 11ம் தேதி இரண்டு ஷிப்டுகளாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வானது ஆரம்பத்தில் மார்ச் 3ம் தேதியே நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், பொதுத் தேர்தல்கள் காரணமாக முதுகலை நீட் தேர்வு தேதி ஜூன் 23க்கு தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் அந்த தேதியில் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது வரும் ஆகஸ்ட் 11ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களை https://natboard.edu.in என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
» கர்நாடக, ஆந்திர மாநில எல்லையில் உள்ள வேப்பனப்பள்ளி ஊராட்சியை தரம் உயர்த்த கோரிக்கை
» ஆங்கிலேயர் காலத்தில் ஆயுத கிடங்காக இருந்த திருப்புல்லாணி அரண்மனை மீட்டெடுக்கப்படுமா?