3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!

By காமதேனு

நாளை நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம், தவிர்க்க முடியாத காரணங்களால் மூன்றாவது முறையாகவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஜூன் 17-ம் தேதியன்று டெல்லியில் நடைபெறும் என மேலாண்மை வாரியம் முன்பு அறிவித்திருந்தது. அதில் கர்நாடக அரசின் மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என ஆணையத்தின் நிகழ்ச்சி நிரலும் வெளியிடப்பட்ட‌து.

இதற்கு தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக அரசின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக முதல் முறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இது குறித்து விரிவான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், மேகேதாட்டு அணை குறித்த கர்நாடகத்தின் கோரிக்கை குறித்து விவாதம் நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது என்று ஜல் சக்தி துறைக்கு அறிவுறுத்துமாறு அவர் கடிதம் எழுதியிருந்தார். இது குறித்து தமிழகம் தொடர்ந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டி இருந்தார்.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. ஜூன் 23-க்கு பதிலாக ஜூலை 6-ம் தேதி நடைபெறும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை நடைபெற இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக மேலாண்மை வாரியம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE