அழகிகளுடன் பேச, நெருக்கமாக இருக்க பணத்தை இழந்தார்: நெல்லையில் உயிரை மாய்த்த ஆந்திர ஐடி ஊழியர்

By காமதேனு

செயலி ஒன்றில் அழகிகளை நம்பி பணத்தைவிட்ட ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நெல்லையில் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(22) பி.டெக் பட்டதாரியான இவர் திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலைசெய்துவந்தார்.நெல்லை பண்டாரகுளம் பகுதியில் இதற்கென வீடு எடுத்து தங்கியிருந்தார். அவருடன் அவரது ஊரைச் சேர்ந்த ஜெயசூர்யா என்பவர் தங்கியிருந்தார். நேற்று காலையில் ஜெயசூர்யா பணிக்குச் சென்றுவிட்டார். இரவுப்பணிக்கு ஜெயக்குமார் செல்ல வேண்டும். ஆனால் அவர் வரவில்லை. நண்பர் ஜெயசூர்யா அறைக்கு வந்து பார்த்தபோது, ஜெயக்குமார் தூக்கில் தொங்கிய படி கிடந்தார்.

இதுகுறித்து ஜெயசூர்யாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் அளித்த வாக்குமூலத்தில், “ஜெயக்குமார் ஒரு புதிய செயலிடை(ஆப்) தன் செல்போனில் பதிவு செய்திருந்தார். அதில் நிறைய அழகிகள் புகைப்படம் இருந்தது. அவர்களுடன் பேச ஒரு மணி நேரத்திற்கு 2,500 ரூபாய் என்பது தொடங்கி, பல வாய்ப்புகள் அதில் இருந்தன. அதை நம்பி பணம் கட்டினார். அழகிகள் பேச, பழக, நெருக்கமாக இருக்க என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கட்டணம் நிர்ணயித்திருந்தனர். அதை நம்பி, ஒரே நாளில் ஒரு லட்சம் வரை பணம் கட்டி இழந்துவிட்டார் ஜெயக்குமார். அழகிகளும் பேசவில்லை. செயலியில் போட்டிருந்த எண்ணுக்கு அழைத்தபோது அவர்கள் திட்டியும் விட்டனர். இதனால் அதிருப்தியடைந்த ஜெயக்குமார் தற்கொலை செய்திருப்பதாக அவரது நண்பர் கூறினார்.

ஐடி நிறுவன ஊழியர் ஆன்லைன் செயலியால் பணத்தை இழந்து, உயிரையும்விட்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE