சைவர்களின் கோயில் என்று அழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி திருவாதிரை, ஆனித் திருமஞ்சனம் ஆகியவை திருவிழாக்களாக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்று வருகிறது.
கடந்த 3-ம் தேதியன்று தங்க கைலாய வாகனத்தில் சுவாமி வீதி உலாவும், நேற்று தங்கரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெற்றன. விழாவில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் இன்று காலை 7 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தில் சித்சபையில் வீற்றுள்ள நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள், உற்சவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேரில் வீதி உலா வருகின்றனர்.
இதில் கூடியுள்ள ஏராளமான பக்தர்கள் சிவதாண்டவம் உள்ளிட்ட நடனங்களை ஆடியும், சிவ வாத்தியங்களை இசைத்தும், தப்பாட்டம் அடித்தும் நடராஜருக்கு முன் தங்கள் கலைகளை சமர்ப்பித்து வருகிறார்கள். வீதிகள் எங்கும் பொதுமக்கள் கோலமிட்டு நடராஜர் தேரை வரவேற்றார்கள்.
இதனைத் தொடர்ந்து இரவு 8 மணி அளவில் ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. நாளை நடைபெற உள்ள ஆனித் திருமஞ்சன தரிசன விழாவில் சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெறும். அதன்பிறகு பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.
ஜூலை 7 அன்று பஞ்சமூர்த்திகள் முத்துப் பல்லக்கு வீதிஉலா உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலர் ஹேமசபேச தீட்சிதர் தலைமையிலான பொதுத் தீட்சிதர்கள் சபையினர் செய்துள்ளனர். விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்பி சக்திகணேசன், சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ் ராஜ் தலைமையிலான காவல் துறையினர் செய்துள்ளனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.