மதுரை கப்பலூர் டோல்கேட்டை அகற்றக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அனுமதி இன்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் அவரை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
திருமங்கலத்தில் இருந்து மதுரை நகருக்கு செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கும், திருமங்கலத்தில் குடியிருக்கும் நபர்களின் வாகனங்களுக்கும் கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க வேண்டும் என்றும், நெடுஞ்சாலையில் ஒரு டோல்கேட்டிற்கும் அடுத்த டோல்கேட்டிற்கும் அரசு நிர்ணயித்துள்ள தூரத்திற்கு குறைவாக இருக்கக்கூடிய டோல்கேட்டுகளை அகற்ற வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் கப்பலூர் டோல்கேட் அகற்றப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று காலை திடீரென டோல்கேட் அருகே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
காவல்துறையினரின் அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதை அறிந்த காவல்துறையினர் உடனடியாக அப்பகுதியில் குவிந்தனர். மேலும், கலைந்து செல்லக்கோரி காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பலனளிக்கவில்லை. இதனால், ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவருடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.