பிஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், தோளில் ஏற்பட்ட எலும்பு முறிவின் காரணமாக பாட்னாவில் உள்ள ‘பாரஸ்’ எனும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். லாலுவின் மனைவி ராப்ரி தேவி, மகன்கள் தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மருத்துவமனையில் அவரைப் பார்த்துக்கொள்கின்றனர். தேஜஸ்வி யாதவ் தானே காரை ஓட்டிச் சென்று தனது தந்தையை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பிணையில் உள்ள லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் தங்கியிருக்கிறார். லாலுவின் மனைவி ராப்ரி தேவியும் பிஹார் முதல்வராகப் பதவி வகித்தவர் எனும் முறையில், பாட்னாவில் முன்னாள் முதல்வருக்கென ஒதுக்கப்படும் இல்லத்தில் லாலு தங்கியிருக்கிறார். இந்நிலையில், நேற்று மாடிப்படிகளில் ஏறியபோது தடுக்கி விழுந்ததில் அவரது வலது தோளில் முறிவு ஏற்பட்டது.
தோளில் ஏற்பட்ட காயங்களுடன், சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் தொடர்பான அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு லாலு கொண்டுவரப்பட்டதாகவும், தற்போது ஐசியூ-வில் சிகிச்சை பெறுவதாகவும் மருத்துவமனை நிர்வாகி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
மேல் சிகிச்சைக்காக அவர் டெல்லிக்கு அனுப்பப்படுவாரா என்பது குறித்து இப்போதே எதையும் தெரிவிக்க முடியாது என்றும் மருத்துவமனை நிர்வாகி குறிப்பிட்டிருக்கிறார்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல லாலுவுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. லாலு சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.