வலுக்கட்டயமாக அழைத்துச் செல்லப்பட்ட மனைவி… எரித்துக் கொல்லப்பட்ட இன்ஜினியர்: ஹைதராபாத்தில் நடந்த ஆணவக்கொலை

By காமதேனு

ஹைதராபாத்தில் மென்பொருள் பொறியாளர் அவரது மனைவியின் உறவினர்களால் எரித்து ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கேபிஎச்பி காலனியைச் சேர்ந்தவர் நாராயணன் ரெட்டி(25). மென்பொருள் பொறியாளர். இவர் சனக்ரெட்டி மாவட்டத்தில் உள்ள ஜின்னாரம் மண்டல் நல்துரு கிராமத்தின் புறநகர்ப் பகுதியில் எரிந்து நிலையில் நேற்று இறந்து கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கேபிஎச்பி போலீஸார், எரிந்த உடலைக் கைப்பற்றி நாராயணன் ரெட்டி எப்படி இறந்தார் என விசாரணையை முடுக்கி விட்டனர். அப்போது அவர் எரித்து ஆணவக்கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனது சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி நாராயணன் ரெட்டி திருமணம் செய்துள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் கேபிஎச்பி காலனியில் வசித்து வந்தனர். சில நாட்களுக்கு முன் நாராயணன் ரெட்டியின் மனைவியை அவரது பெற்றோர், வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.

நாராயணன் ரெட்டி அவரது மனைவியைப் பார்க்கச் சென்ற போது அவர் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த நிலையில் ஜூன் 27-ம் தேதி அவரது மனைவியின் உறவினர்கள் சமரசம் செய்து வைப்பதாக அறிவித்துள்ளனர். இதை நம்பி சென்ற நாராயணன் ரெட்டிக்கு மது கொடுத்து மயங்கிய பின்பு கழுத்தை நெரித்துக் கொலை செய்ததுள்ளனர். இதன் பின் அவரது உடலை ஜின்னாரம் பகுதிக்குக் கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். இதை நாராயணன் ரெட்டியை கொலை செய்தவர்கள் ஒத்துக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. நாராயணன் எரித்துக் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ரெட்டி உடலை தடவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE