தனியார் நிறுவனத்தில் நள்ளிரவில் தீவிபத்து: உடல் கருகி இருவர் பலி

By காமதேனு

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டிடத்தில் நேற்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மூன்று மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் முதல் தளத்திலிருந்த கணினி உதிரிப்பாகம் வைத்துள்ள குடோனில் நள்ளிரவில் திடீரென தீப்பற்றி இருக்கிறது.

இந்த தீவிபத்து குறித்து அதிகாலையில் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து எழும்பூர், தேனாம்பேட்டை, கீழ்ப்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட நான்கு தீயணைப்பு நிலையங்களிலிருந்தும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கொழுந்து விட்டு எரிந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் போராடிக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் சதீஷ், கோபி ஆகியோர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடலை மீட்ட காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அஸ்வின் மற்றும் சசிகலா ஆகியோர் நடத்தி வரும் இந்த நிறுவனத்தில், கணினி உதிரிப் பாகங்கள், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட பொருட்களை வைக்கும் குடோனாக இந்த அலுவலகத்தைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இந்த நிறுவனத்தில் இரவுப் பணிக்கு சதீஷ், கோபி ஆகியோர் நேற்று வந்துள்ளனர். இந்த நிலையில் மின்கசிவு காரணமாக நள்ளிரவில் தீவிபத்தில் அவர்கள் உயிரிழந்தது தெரிய வந்தது.

இந்த தீவிபத்து குறித்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் அஸ்வின் மற்றும் சசிகலா ஆகிய இருவரின் மீதும் ஆயிரம் விளக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE