கோயில் பிரசாதம் என்றாலே சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, லட்டு, வடை, பஞ்சாமிர்தம், சுண்டல் போன்ற உணவுகள்தான் நம் நினைவிற்கு வரும். ஆனால் கோயில் பிரசாதமாக பர்கர், சாண்ட்விச் போன்ற மேற்கத்திய உணவுகளை வழங்குவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சென்னை, படப்பையில் ஜெய துர்கா பீடம் என்ற கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வரும் பக்தர்களைக் கவர்வதற்காகப் பாரம்பரிய பிரசாதங்களைத் தவிர்த்து விட்டு இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்குப் பிடித்தமான பர்கர், சாண்ட்விச், பிரவுனி போன்ற மேற்கத்திய நாட்டு உணவுகளை வழங்குகிறார்கள். கோயிலில் வழங்கப்படும் பிரசாதங்கள் FSSAI எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் முத்திரை பெற்றது. பிரசாதம் காலாவதியாகும் நாளும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கோயிலுக்குத் தினசரி வரும் பக்தர்களின் பிறந்தநாளன்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டு பக்தர்களுக்கு அவை பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இந்த கோயில் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீதர் ஒரு மூலிகை புற்றுநோயியல் மருத்துவர் என்பதால் சுகாதாரமான உணவுகளை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இதனைப் பக்தர்களுக்கு வழங்குவதாகக் கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "கோயிலின் தூய்மையில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம். கோயில்களில் தரமற்ற பிரசாதங்கள் விநியோகிக்கப்படுவதை நாம் பார்த்துள்ளோம். அவற்றைச் சாப்பிடுபவர்களின் உடல் நலனின் தீங்கை ஏற்படுத்துகிறது. பக்தி மிகுதியால் பக்தர்களும் யோசிக்காமல் அவற்றைச் சாப்பிடுகிறார்கள்." என்கிறார்.
அவர் கூற்றுப்படி சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம், சுண்டல் போன்றவை தரமற்ற உணவுகளாகப் பக்தர்களுக்குக் கொடுப்பதாக இருக்கிறது. சுண்டல், பழம் போன்றவற்றில் சத்துக்கள் இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. பர்கர், சாண்ட்விச் போன்ற உணவுகள் நார்ச்சத்து இல்லாதவை அவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டால் புற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அந்தந்த சூழலுக்கு ஏற்ப உணவு வகைகளை உண்பதே உடலுக்கு ஏற்றது என்ற நிலையில், பக்தர்களைக் கவர்வதற்காகக் கோயிலில் மேற்கத்திய உணவுகள் வழங்குவதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனத்தைத் தெரிவிக்கிறார்கள்.