மதுரையில் நடைபெற்ற காவல்நிலைய மரணங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் காவல்துறையினர் சட்டத்திற்கும், மனசாட்சிக்கும் உட்பட்டு செயல்பட வேண்டும் என்று தமிழக காவல்துறையின் தலைவர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
காவல்நிலைய மரணங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் இன்று நடைபெற்ற. இதில், தமிழக காவல்துறையின் தலைவர் சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க், மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சைலேந்திரபாபு, "கடந்த 10 ஆண்டுகளில் 80 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில், அதிகமாக 2018-ம் ஆண்டு 18 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 2021-ல் நான்கும், 2022-ல் இரண்டு காவல்நிலைய மரணங்களும் திகழ்ந்துள்ளன.
தமிழக முதல்வர் காவல்நிலைய மரணங்கள் இருக்கக் கூடாது எனக் கூறி உள்ளார். அதனை நடைமுறைப் படுத்திட காவல்துறையினர் செயல்பட வேண்டும். தவறு செய்யாமலேயே சில நேரங்களில் காவல்துறையினர் மீது புகார்கள் வருகின்றன.
தமிழ்நாடு காவல்துறை பாரம்பரியமிக்கது. அவர்கள் யாரையும் துன்புறுத்த மாட்டார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக அது நிகழும், அதுவும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். காவல்துறை அரசாங்கத்தின் அங்கம், சட்டத்தின் பார்வையில் இருக்கிறது. சட்டத்திற்கும் மனசாட்சிக்கு உட்பட்டு காவல் கோட்டுபாட்டுக்கு உட்பட்டு காவல்துறை செயல்பட வேண்டும்" என்றார்.