இங்கிலாந்து பிரதமராகும் கீர் ஸ்டார்மர் முதல் சமூக நீதி துரோகம் சலசலப்பு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள் 

By KU BUREAU

> இங்கிலாந்தில் முடிவுக்கு வந்த 14 ஆண்டு கால கன்சர்வேட்டிவ் ஆட்சி: பிரிட்டனில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கீர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி அருதிப் பெரும்பான்மை வெற்றியை பெற்றுள்ளது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், தேர்தல் வெற்றியை அடுத்து லண்டனில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் வெற்றி உரையாற்றிய கீர் ஸ்டார்மர், “தேர்தல் வெற்றியின் மூலம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு அதன் எதிர்காலத்தைப் பெறுகிறது. மக்கள் மத்தியில் ஒரு நிம்மதி ஏற்பட்டிருக்கிறது. இந்த மாற்றத்தை நாம்தான் செய்தோம். இதற்காக நீங்கள் (ஆதரவாளர்கள்) பிரச்சாரம் செய்தீர்கள், போராடினீர்கள், வாக்களித்தீர்கள். இப்போது மாற்றம் வந்துவிட்டது. நீங்கள் நாட்டை மாற்றிவிட்டீர்கள். நேர்மையாகச் சொல்வதானால் இது மிக நல்ல விஷயம். உங்களின் கடின உழைப்புக்கு நன்றி.

இந்த பெரிய தேசத்தின் புதிய விடியல் தற்போது தோன்றி இருக்கிறது. இனி நாம் நம்பிக்கையின் ஒளியுடன் நடக்கலாம். நாட்டு மக்கள் நமக்கு ஆணையிட்டுள்ளார்கள். இந்த ஆணை, ஒரு பெரிய பொறுப்புடன் வந்திருக்கிறது. இன்றுமுதல் நாம் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவோம். மாற்றத்திற்கான வேலையைத் தொடங்குவோம். அரசியல் என்றால் அது பொது சேவை செய்வதற்கானது என்ற நிலையை மீண்டும் நாம் உருவாக்குவோம். நமது அரசு நன்மைக்கான சக்தியாக இருக்கும் என்பதை நாம் காட்டுவோம்” என தெரிவித்தார்.

> “தோல்விக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்” - ரிஷி சுனக்: பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது கன்சர்வேட்டிவ் கட்சி. இந்நிலையில், இந்த தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன் என அக்கட்சியை சேர்ந்தவரும், பிரதமருமான ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

தோல்வி குறித்து ரிஷி சுனக், “தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. நான் கீர் ஸ்டார்மரை தொடர்பு கொண்டு பேசினேன். அவருக்கு எனது வாழ்த்தினை தெரிவித்தேன். இன்று ஆட்சி அதிகாரம் அமைதியான முறையில் கைமாறியுள்ளது. நம் நாட்டின் எதிர்காலம் சார்ந்து நம் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆட்சி அமைய வேண்டும். இந்த தோல்விக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன். என்னை மன்னிக்கவும்” எனத் தெரிவித்தார். அவர் வடக்கு இங்கிலாந்தில் போட்டியிட்டு நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

> பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமரன்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போ நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார் உமார் குமரன். தமிழரான இவர் லேபர் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அந்த கட்சி பிரிட்டனில் சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது.

> ஹாத்ரஸுக்கு நேரில் சென்ற ராகுல் காந்தி: உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் போலே பாபா சாமியார் நடத்திய பிரசங்க கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 உயிரிழந்தனர். இந்தச் சூழலில் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அலிகரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அவர் சந்தித்தார். காங்கிரஸ் கட்சி உதவும் என உறுதி அளித்துள்ளார்.

> கேஜ்ரிவால் வழக்கில் சிபிஐக்கு ஐகோர்ட் நோட்டீஸ்: டெல்லி மதுபான ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்திருக்கும் ஜாமீன் மனு தொடர்பாக மத்திய புலனாய்வு முகமைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

> “சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு பாடம் புகட்ட வாக்களியுங்கள்”: “சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு பாடம் புகட்ட இண்டியா கூட்டணி வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு வாக்களியுங்கள்” என்று விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

> சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்கள் யார்? - அன்புமணி பட்டியல்: ‘சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்கள் யார்? என்பதை என்பதை மக்கள் புரிந்து கொள்ள சில உண்மைகள்..’ என 10 கருத்துகளை முன்வைத்து தமிழக முதல்வர் ஸ்டாலினின் சமூகவலைதளப் பதிவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

அவர், "தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்த பிறகும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பது யார்? தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டின் மீது கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இட ஒதுக்கீடே போனாலும் பரவாயில்லை என்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாடோம் என முரண்டு பிடிப்பது யார்?

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது, அந்த இட ஒதுக்கீட்டை நீக்காமல் ஓய மாட்டோம் என்று கூட்டம் நடத்தி முழக்கமிட்டது எந்த சமூகம்? அந்தக் கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மருத்துவர் ஜெய ராஜ மூர்த்தி யாருடைய மைத்துனர்? தமிழ்நாட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பிசி/எம்.பி.சி வகுப்பினருக்கான இடங்களை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கலாம், ஆனால், பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினருக்குமான இடங்களை அவர்களில் யாரும் இல்லாத சூழலிலும் யாருக்கும் ஒதுக்கக் கூடாது என்று ஆணையிட்டிருப்பது எந்த அரசு? " உள்ளிட்ட பத்து கேள்விகளை பட்டியலிட்டுள்ளார்.

> மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக உண்ணாவிரத போராட்டம்: பாஜக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சனிக்கிழமை திமுக சட்டத் துறை சார்பில் மாபெரும் உண்ணாவிரத அறப் போராட்டம் நடைபெறவிருப்பதாக திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., தெரிவித்துள்ளார்.

> ஓசூர் சோதனைச் சாவடி சோதனையில் ரூ.2.25 லட்சம் பறிமுதல்: ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 25 ஆயிரத்து 950 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் நிர்மல்குமார் மற்றும் அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

> இந்திய அணியின் வெற்றி பேரணியில் ரசிகர்கள் காயம்: தெற்கு மும்பையில் டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்காக நடந்த வெற்றிப் பேரணியில் ஏராளமான ரசிகர்கள் கூடியதால் சிறு காயம் மற்றும் லேசான மயக்கம் அடைந்த குறைந்தது 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE