52 வயதான காந்திமதி யானைக்கு மூட்டுவலி: பிரத்யேக காலணி வழங்கிய சிவபக்தர்கள்!

By காமதேனு

பார்ப்பதற்கு குடுவையின் மாதிரி போல் இருக்கும் இந்தப் படங்கள் யானையின் காலணி. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானைக்கு பக்தர்கள் தங்கள் பங்களிப்பாக இந்த காலணியை வாங்கிக் கொடுத்திருக்கின்றனர்.

திருநெல்வேலியில் பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோயில் உள்ளது. இந்த ஆலயத்தை மையமாக வைத்தே நெல்லை என பெயர் வந்தது. நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி என்னும் பெண் யானை உள்ளது. இந்த யானை பக்தர்களோடு மிகவும் நெருக்கமானது. தற்போது 52 வயதாகும் இந்த யானை, ஆனித்திருவிழா உள்பட கோயிலின் முக்கியத் திருவிழாக்களின் போது சுவாமியின் முன்பே கம்பீரமாகச் செல்லும். கூடவே வழிநெடுகிலும் நிற்கும் பக்தர்களுக்கு ஆசியும் வழங்கும்.

வயோதிகத்தினால் காந்திமதி யானைக்கு அண்மைக்காலமாக காலில் மூட்டுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் சப்பர வீதி செல்லும் வழியில் யானை செல்லும்போது பாதமும் சேதமாகி வந்தது. இதை உணர்ந்த சிவபக்தர்கள் காந்திமதி யானைக்கு அணிவிக்க நான்கு கால்களுக்கும், நான்கு காலணியை அவர்கள் பங்களிப்பாகச் செய்துகொடுத்தனர். அதை இன்று காலையில் காந்திமதி யானையின் பாகனிடம் கொடுத்தனர். யானையின் காலணியை கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE