`வாட்அப்பில் மெசேஜ் அனுப்புவார்கள், நம்பாதீங்க'- பொதுமக்களை அலர்ட் செய்யும் காவல்துறை ஆணையர்

By காமதேனு

``மின் இணைப்பு தொடர்பாக செல்போனுக்கு வரும் குறுஞ்செய்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்'' எனச் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

வங்கிக் கணக்கு காலாவதியாகி விட்டது என வங்கித் தகவல்களைக் கேட்டு மோசடி செய்யும் கும்பல்கள் பெருகிவருகின்றன. வெளிநாட்டு பரிசு, ஆதார் கார்டு பேன் கார்டு லிங்க் செய்வது, இன்பச் சுற்றுலா எனப் பல பரிமாணங்களில் அவர்கள் ஏமாற்று வேலையைத் தொடருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக மின்வாரியத்தின் பெயரிலும் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இது போன்ற மோசடிகளில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனச் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சமீபகாலங்களாக சைபர் க்ரைம் மோசடிப் பேர்வழியினர், பொதுமக்களை ஏமாற்றுவதற்காக புதிய யுக்திகளைக் கையாண்டு வருகிறார்கள். செல்போன் எண்ணுக்கு வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும் என்றும், சென்ற மாதம் மின் கட்டணம் அப்டேட் செய்யப்படவில்லை என்றும் உடனே மின்வாரிய அதிகாரியைத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள் என செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கின்றனர். பதற்றத்தில் இருக்கும் அவர்களிடம் வங்கிக் கணக்கு விவரங்களை பெற்று நூதன முறையில் கொள்ளையடிக்கிறார்கள். எனவே பொதுமக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலி குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். அவர்கள் அனுப்பும் எண்ணிற்கும் தொடர்பு கொள்ள வேண்டாம். மின்வாரியத்திலிருந்து இதுபோன்ற குறுந்தகவல்களோ, மொபைல் அழைப்புகளோ வராது. எனவே பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE