தமிழில் முதன் முதலில் மொழி பெயர்க்கப்பட்ட பைபிள்: 22 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில் கண்டுபிடிப்பு

By ரஜினி

தமிழில் முதன்முதலில் மொழிப்பெயர்க்கப்பட்ட 300 ஆண்டுகள் பழமையான பைபிள் லண்டனில் இருப்பதை தமிழக சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் பார்த்தோலொமஸ் சீகன் பால்க் , டென்மார்க் நாட்டு மன்னரின் வேண்டுகோளை ஏற்று 1706-ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள நாகபட்டினம் மாவட்டத்திற்கு வருகைதந்தார். பின்னர் நாகப்பட்டினத்தில் அச்சகம் ஓன்றை நிறுவி தமிழ் மொழியில் இந்திய நாட்டு கலாச்சாரம் மற்றும் மதம் சம்பந்தமான நூல்களை வெளியிட்டார்.

அதன் பின்னர் 1715-ம் ஆண்டு புதிய ஏற்பாடு பைபிளை முதல் முதலாக தமிழில் மொழிபெயர்த்து அச்சடிக்கவும் செய்தார். 1719-ம் ஆண்டு சீகன் பால்க் இறந்த பின்பு அரிய வகை பைபிளை அப்போதைய தஞ்சாவூர் சரபோஜி மன்னருக்கு பரிசாக வழங்கப்பட்டது. இதையடுத்து பிற்காலத்தில் தமிழக அரசாங்கத்தால் அந்த பைபிள் கைப்பற்றப்பட்டு தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

பைபிள் உள்ள லண்டனில் உள்ள மியூசியம்.

இந்நிலையில் விலைமதிப்பற்ற இந்த பைபிள் காணாமல் போய்விட்டதாக சரஸ்வதி மகால் அருங்காட்சியத்தின் நிர்வாக அலுவலர், தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் கடந்த 2005-ம் ஆண்டு புகார் அளித்தார். பின்னர் இந்த புகார் கண்டுபிடிக்க முடியாத வழக்காக முடித்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு மீண்டும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சிலை கடத்தல் தடுப்பு போலீஸில் இது தொடர்பாக புகார் அளித்தார். இதன் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், தனிப்படை அமைத்து 2005-ம் ஆண்டுக்கான பதிவேடுகளை ஆய்வு செய்த போது, சில வெளிநாட்டினர் குழுவாக சரபோஜியின் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சிக்கு அருங்காட்சியத்திற்கு வந்தது தெரியவந்தது.

மேலும் வெளிநாட்டு அருங்காட்சியங்களின் வலைதளங்களை வைத்து தேடிய போது லண்டனைச் சேர்ந்த கிங்ஸ் கலெக்‌ஷன் மியூசியத்தில் தரங்கம்பாடியில் அச்சடிக்கப்பட்ட சரபோஜி மன்னரின் கையெழுத்தோடு கூடிய பைபிள் இருப்பதை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கண்டுபிடித்தனர்.

அந்த பைபிள், சரஸ்வதி மகால் நூலகத்திலிருந்து திருடப்பட்டு வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து திருடப்பட்ட பழங்கால பைபிளை யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் மூலமாக திரும்ப கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருவதற்கான முயற்சிகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த பைபிளை திருடியது யார்? எப்படி லண்டனுக்கு சென்றது என்பது குறித்தும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE