ஒரு போதை மாத்திரை 300 ரூபாய்... பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை: இளைஞர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!

By பா.ஜெயவேல்

சென்னையில் மாணவர்களுக்குப் போதை மாத்திரைகளை சப்ளை செய்துவந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 900 மாத்திரைகள் மற்றும் 1,300 ஊசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சென்னை, பல்லாவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்த நிலையில் பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த ஜகருல்லா(27) என்பவர் பள்ளி கல்லூரி மாணவர்களுக்குப் போதை மாத்திரை விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, பல்லாவரம் காவல் நிலையம் அருகே பிரியாணி கடை ஒன்றை நடத்தி வருவதாகவும், கடைக்கு வரும் மாணவர்களிடம் நட்பாகப் பழகி அவர்களுக்குப் போதை மாத்திரை சப்ளை செய்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். “காலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று போதை மாத்திரைகளை விற்றுவிட்டு மாலை பிரியாணி கடையில் வேலையைத் தொடர்வேன். ஒரு மாத்திரையை 300 ரூபாய்க்கு விற்பனை செய்வேன்” என ஜகருல்லா விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

அவரிடம் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து மீனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பவுல்(21), சேலையூர் பகுதியைச் சேர்ந்த உதயசீலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். உதயசீலனிடம் நடைபெற்ற விசாரணையில், மருந்துக் கடை வைத்திருப்பது போல் போலியான ஆவணம் தயாரித்து மும்பையிலிருந்து ஆன்லைன் மூலமாக வலி நிவாரண மாத்திரைகளை வரவைப்பதாகவும், 15 நாட்களுக்கு ஒரு முறை சுமார் 2,000 மாத்திரைகளை வாங்கி அதை சென்னை புறநகர் பகுதிகளில் விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். சென்னையை தொடங்கி செங்கல்பட்டு வரை அவர்களின் நெட்வொர்க் இருப்பதைக் கண்டு காவல் துறையினர் அதிர்ந்து போனார்கள். கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE