`மருத்துவ சீட் கிடைக்குமானு பயத்தில் இருந்தான்'- நீட் தேர்வால் உயிரை மாய்த்த தனுஷின் சகோதரர் கண்ணீர்

By ரஜினி

"தான் மருத்துவர் ஆனவுடன் அனைத்து ஊடகங்களும் நம் வீட்டின் வாசலில் வந்து தன்னை பேட்டி எடுப்பார்கள் என்று ஆசை ஆசையாக கூறிய தன் சகோதரன் இறப்பிற்கு அனைத்து ஊடகங்களும் வந்துள்ளன" என்று கண்ணீர் மல்க கூறினார் தனுஷின் சகோதரர்.

சென்னை சூளைமேடு சுப்பாராவ் நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரதாப்-ஜெயந்தி தம்பதியின் மகன்கள் கரண், தனுஷ். மனைவி ஜெயந்தி இட்லி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது இளைய மகன் தனுஷ் கடந்த 2020-ம் ஆண்டு அரசு பள்ளியில் பிளஸ்2 தேர்ச்சி பெற்று போன கல்வியாண்டில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற்றுள்ளார். பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த தனுஷ் நீட் தேர்வில் 159 மதிப்பெண்கள் பெற்று மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற போது அவர் எடுத்த மதிப்பெண்ணிற்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க போதிய பணம் இல்லாத காரணத்தினால் மீண்டும் நீட் தேர்விற்காக தன்னை தயார் செய்து வந்தார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் மூலம் அரசு மருத்துவக் கல்லூரியில் பயில வேண்டும் என்ற கனவோடு இரவு பகல் பாராமல் தனுஷ் பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில் ஏழ்மை நிலை காரணமாக தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற முடியாத சூழல் ஏற்பட்டது. இருப்பினும் சொந்த முயற்சியில் வீட்டில் இருந்து கொண்டே படித்து வந்தார்.

வரும் ஜூலை மாதம் 17-ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து, தனுஷ் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனது சகோதரர் கரணிடம் அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதால் படிப்பதற்கு மிகவும் கடினமாக இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். இதனையடுத்து நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனுஷ் திடீரென பெல்ட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னால் படிக்க முடியாத காரணத்தினாலும், தன்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என தெரிவித்து வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சூளைமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து தனுஷின் சகோதரர் கரண் கூறுகையில், "தனது சகோதரர் தனுஷ் முதல் முறை நீட் தேர்வு எழுதி அரசு மருத்துவக் கல்லூரி சேர்வதற்கான மதிப்பெண் எடுக்காததால், மீண்டும் நீட் தேர்வு எழுத பயிற்சி மேற்கொண்டு வந்தார். ஆங்கிலத்தில் இருப்பதால் அரசுப்பள்ளியில் படித்த தனக்கு படிப்பது மிகவும் கடினமாக இருப்பதாகவும், மருத்துவ சீட் கிடைக்குமா என்று பயத்தை வெளிப்படுத்தினார். படிப்பில் சரியான பாதை தேர்ந்தெடுத்து செல்கிறேனா என்ற மனக்குழப்பத்தில் இருந்தார். மருத்துவர்போல் பல உடல் சம்பந்தப்பட்ட விஷயங்களை தன்னுடன் சகோதரர் தனுஷ் பகிர்ந்து கொண்டு வந்தார். தான் மருத்துவர் ஆனவுடன் அனைத்து ஊடகங்களும் நம் வீட்டின் வாசலில் வந்து தன்னை பேட்டி எடுப்பார்கள் என்று ஆசை ஆசையாக கூறிய தன் சகோதரன் இறப்பிற்கு அனைத்து ஊடகங்களும் வந்துள்ளன" என்று கண்ணீர் மல்க கூறினார்.

மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு தீவிரப் பயிற்சி மேற்கொண்ட அரசுப் பள்ளியில் படித்த பழங்குடியின மாணவன், நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE