நீட் தேர்வுக்கு பயந்து சென்னை மாணவர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேடு சுப்பாராவ் நகர் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரதாப்(42). இவரது இளையமகன் தனுஷ்(18). கடந்த 2020-ம் ஆண்டு பிளஸ்2 படித்து முடித்து பின்னர் நீட் தேர்வு எழுதியுள்ளார். நீட்தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனசோர்வு அடைந்த தனுஷ் இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுவதற்காக தன்னை தயார்படுத்திவந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் காலை தந்தை, தாயும் வேலைக்கு சென்ற பின்னர் தனுஷ் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு அவரது தாய் பணி முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு தாழ்ப்பாள் போடாமல் சாத்தியபடி இருந்தது.
பின்னர் அவர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது மகன் தனுஷ் வீட்டு மேற்கூடையில் பெல்ட்டால் தூக்கிட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் தனுஷை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தனுஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை கேஎம்சி மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு தெரிவித்ததை அடுத்து அவர்கள் கேஎம்சி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோத்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தந்தை பிரதாப் அளித்த புகாரின் பேரில் சூளைமேடு போலீஸார் சம்பவயிடத்திற்கு சென்று தனுஷ் உடலை கைப்பற்றி அவரது செல்போனில் தற்கொலை செய்து கொள்வதாக பதிவிட்ட வீடியோவை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் ஏற்கெனவே நீட் தேர்வில் தோல்வியடைந்த தனுஷ் மீண்டும் நீட் தேர்வு எழுத எண்ணிய நிலையில் இரண்டாவது முறையும் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.