அஞ்சலக சேவைக்கான வரி விலக்கு ரத்து: ஜிஎஸ்டி வரியை அதிரடியாக உயர்த்தியது மத்திய அரசு

By காமதேனு

பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை உயர்த்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், ஆன்லைன் விளையாட்டுகள், சூதாட்டம் மீது 28 சதவீதம் வரி விதிக்கும் முடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டது.

இதன் பின்னர், எல்இடி விளக்குகள், கிரைண்டருக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், பேனா மை, கத்தி, பிளேடு, ஸ்பூன்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், மோட்டார் பம்புகள், பால் பண்ணை இயந்திரங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சோலார் வாட்டர் ஹீட்டர்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகவும், தோல் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், ஆயிரம் ரூபாய்க்கு குறைவான ஹோட்டல் வாடகை அறைக்கு ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், அஞ்சலக சேவைக்கான ஜிஎஸ்டி வரி விலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே அஞ்சலக சேவைக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது நினைவில் கொள்ளத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE