இலங்கையில் புனர்வாழ்வு மையத்தில் கைதி ஒருவர் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தை அடுத்து இரு தரப்பினர் இடையே மோதல் நடைபெற்றது. இந்த கலவரத்தின் போது பாதுகாப்பு வேலிகளை உடைத்துக் கொண்டு 600-க்கும் மேற்பட்ட கைதிகள் இன்று தப்பிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை பொலன்னறுவையில் கந்தகாடு புனர்வாழ்வு நிலையம் உள்ளது. இ்ங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இங்கிருந்த கைதி ஒருவர் நேற்று இரவு மர்மமான முறையில் இறந்தார். இதையடுத்து புனர்வு வாழ்வு மையத்திற்குள் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கானோர் இந்த மோதலில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
அத்துடன் புனர்வாழ்வு நிலையத்தில் பணியில் இருந்த போலீஸார், ராணுவத்தினர் மீது கைதிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் பாதுகாப்பு வேலிகளை உடைத்துக் கொண்டு 600-க்கும் மேற்பட்ட கைதிகள் இன்று தப்பிச் சென்றனர். அவர்களைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.