ஓடும்போதே பற்றி எரிந்த தனியார் பேருந்து... உயிர் தப்பிய 37 பயணிகள்: நடுரோட்டில் நடந்த பயங்கரம்

By காமதேனு

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் தனியார் பேருந்து சென்று கொண்டிருக்கும்போதே திடீரென தீப்பற்றி எரிந்தது. எலும்புக் கூடாக இந்த பேருந்து காட்சியளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேநேரம், ஓடும் பேருந்தில் தீப்பற்றினாலும் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை என்பது ஆறுதலான விஷயம்!

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் இருந்து கோயம்புத்தூருக்கு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. பேருந்தினை காயாமொழியைச் சேர்ந்த சாமிநாதன் ஓட்டி வந்தார். பேருந்தில் மொத்தம் 37 பயணிகளும், பேருந்தின் கீழ் பகுதியில் கோவைக்கு செல்ல வேண்டிய கொரியர் பார்சல்களும் இருந்தன. பேருந்து நேற்று இரவு 10.25க்கு ஓட்டப்பிடாரம் புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடியை தாண்டிச் சென்றுகொண்டிருந்தது.

அப்போது, பேருந்தில் இருந்து லேசான தீப்பொறி வந்துள்ளது. உடனே மின்கசிவினால் தீப்பொறி வருவதாக கணித்த ஓட்டுநர் சாமிநாதன், பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டுப் பார்த்தார். அப்போது பேருந்தில் தீ வேகமாகப் பரவத் தொடங்கியது. உடனே பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் இறங்கச் சொன்னார் சாமிநாதன். இரவு 10.25 மணி ஆகியிருந்த நிலையில் பயணிகள் யாரும் தூங்கவில்லை. இதனால் உடனே இறங்கிவிட்டனர். ஒருவேளை இன்னும் ஓரிரு மணிநேரங்கள் கடந்திருந்தால் பெரிய அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்கக் கூடும். ஆனாலும் இந்தத் தீவிபத்தில் 37 பயணிகளின் உடமைகளும் முற்றாக எரிந்து நாசமானது.

இந்தத் தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும், சிப்காட் தீயணைப்புத்துறை அதிகாரி குமார் தலைமயிலான வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். புதியம்புத்தூர் போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE