‘எனக்கும் என் குடும்பத்துக்கும் அச்சுறுத்தல்’ - உதய்ப்பூர் படுகொலையைத் தொடர்ந்து நவீன் குமார் ஜிந்தல் புகார்

By காமதேனு

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் பதிவிட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த தையல் கலைஞர் கன்னையா லால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, நபிகள் நாயகம் குறித்து சமூகவலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததால் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட நவீன் குமார் ஜிந்தல், தனது உயிருக்கும் தனது குடும்பத்தினரின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகப் புகார் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் நடந்துவரும் மத ரீதியிலான மோதல் குறித்து நடந்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தின்போது நபிகள் நாயகம் குறித்து, பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா அவதூறாகப் பேசியதாகப் புகார் எழுந்தது. அவரது சர்ச்சைக் கருத்துக்கு கத்தார், குவைத், ஓமன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மாலத்தீவு, இந்தோனேசியா, லிபியா, ஜோர்டான், துருக்கி, பஹ்ரைன், ஈரான், இராக் போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்தன. பல்வேறு நாடுகளும் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்த நிலையில் நுபுர் ஷர்மா பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். நபிகள் நாயகம் குறித்து ட்விட்டரில் அவதூறாகக் கருத்து தெரிவித்த டெல்லி நவீன் குமார் ஜிந்தல் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார். இவர் பாஜகவின் ஊடகப் பிரிவுத் தலைவராக இருந்தவர்.

இந்தப் பரபரப்புகள் சற்றே தணிந்திருந்த நிலையில், ராஜஸ்தானின் உதய்ப்பூரில் வசித்துவந்த தையல் கலைஞர் கன்னையா லால், நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் பதிவிட்டதாக மத அடிப்படைவாதிகள் நேற்று அவரைக் கொடூரமாகக் கொன்றனர். அந்தப் படுகொலையைக் காணொலியாகவும் பதிவுசெய்தனர். இதையடுத்து ராஜஸ்தானில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

படுகொலை செய்யப்பட்ட கன்னையா லால்

முன்னதாக, நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக் கருத்துக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் பதிவிட்டதற்காக ஜூன் 10-ல் கன்னையா லால் கைதுசெய்யப்பட்டார். ஜூன் 11-ல் ஜாமீனில் வெளிவந்த அவர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜூன் 15-ல் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். தனது 8 வயது மகன் செல்போனில் விளையாடும்போது தவறுதலாக ஒரு பதிவை சமூகவலைதளத்தில் பகிர்ந்துவிட்டதாகக் கூறிய அவர், அதைத் தொடர்ந்து தனக்குத் தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும், தனது புகைப்படத்தைச் சிலர் சமூக ஊடகங்களில் பரப்பியதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.

அவர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ராஜஸ்தான் முழுவதும் 24 மணி நேரத்துக்கு இணையம் முடக்கப்பட்டிருக்கிறது. அதிக எண்ணிக்கையில் மக்கள் பொது இடங்களில் கூடவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது கன்னையா லாலைப் படுகொலை செய்த கோஸ் முகமது மற்றும் ரியாஸ் இருவரும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். ஐஎஸ் பயங்கரவாதிகளைப் போல மிகக் கொடூரமாகக் கொலை செய்திருக்கும் இந்த இருவரின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக இந்தியில் ட்வீட் செய்திருக்கும் நவீன் குமார் ஜிந்தல், ’இன்று காலை 6.43 மணிக்கு எனக்கு மூன்று மின்னஞ்சல்கள் வந்தன. அதில் கன்னையா லால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட காணொலி இணைக்கப்பட்டிருந்தது. என்னையும் என் குடும்பத்தினரையும் மிரட்டும் வகையில் அந்த மின்னஞ்சல்கள் இருந்தன. இதுகுறித்து காவல் துறையினரிடம் தெரிவித்திருக்கிறேன்’ என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE