ஆர்டிஐ மூலம் தகவல் கேட்ட விவசாயி... மறுத்த மின்வாரிய அதிகாரிக்கு அபராதம்: தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடி

By எஸ்.நீலவண்ணன்

சுயநிதி திட்ட விவசாய மின் இணைப்பு குறித்து தகவல் அளிக்காத மின் வாரிய செயற் பொறியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது தமிழ்நாடு தகவல் ஆணையம்.

விழுப்புரம், விராட்டிகுப்பம் பாதையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தமிழ்நாடு மின் வாரியத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் விவசாய மின் இணைப்புக்காக சுயநிதி திட்டத்தின் கீழ் முழு பணம் செலுத்தியுள்ளார். ஆனால், மின்இணைப்பு வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதனிடையே, மின் இணைப்பு வழங்காமல் 10.10.2019-ம் தேதிவரை காத்திருப்பில் உள்ளவர்கள் பட்டியல் குறித்து தகவல் தெரிவிக்குமாறு, தகவல் உரிமைபெறும் சட்டத்தின் கீழ் கடந்த 15.10.2019-ம் தேதி விண்ணப்பித்தார் ராஜேந்திரன். ஆனால் செஞ்சி மின் பகிர்மான வட்டத்தை தவிர மற்ற மின் பகிர்மான வட்டத்தில் உள்ள அதிகாரிகள் கேட்கப்பெற்ற தகவல்களை தரவில்லை. இதையடுத்து, தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் விவசாயி ராஜேந்திரன் முறையீடு செய்தார்.

இந்த முறையீட்டு மனு மாநில தகவல் ஆணையர் தமிழ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விழுப்புரம், திண்டிவனம், கண்டமங்கலம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு தகவல் வழங்க மறுத்து உள்ளது உறுதி செய்யப்படுகிறது. காலதாமதமாகவும், தகவல் வழங்க மறுத்ததால், தகவல் பெறும் உரிமை சட்டவிதி 19(8) (B)ன் படி இவ்வாணை கிடைக்கப்பெற்ற ஒருவார காலத்திற்குள் அப்போதைய விழுப்புரம், கண்டமங்கலம், திண்டிவனம் இயக்குதலும், பராமரித்தலும் பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர்கள் நஷ்டஈடாக தலா ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிடப்படுகிறது.

மேலும் தகவல் உரிமை பெறும் சட்ட பிரிவு 20(1)ன்படி நாள் ஒன்றுக்கு ரூ.250 வீதம் ரூ. 25 ஆயிரம் அபராதம் ஏன் விதிக்கக்கூடாது என்று என்பதற்கான விளக்கத்தை நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக சமர்பிக்க வேண்டும் என மாநில தகவல் ஆணையர் தமிழ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE