ஆட்சியாளர்களாலும், தலைவர்களாலும் இலங்கை அடக்கம் செய்யப்பட்டுள்ளது: வினோ நோகராதலிங்கம் எம்.பி வேதனை

By காமதேனு

இலங்கை அதன் ஆட்சியாளர்களாலும், தலைவர்களாலும் சவப்பெட்டிக்குள்ளே வைத்து அடைக்கப்பட்டுள்ளது. அல்லது அடக்கம் செய்யும் நிலைக்கு வந்துள்ளது. ஆணி அடிப்பது மாத்திரமே இறுதி வேலையாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் வவுனியாவில் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், "அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் எரிபொருள் வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டதை ஏற்க முடியாது. ஏனெனில் எரிபொருளின் அத்தியாவசியத் தேவை என்பது இன்றைய சூழலில் ஒவ்வொரு மனிதருக்கும், நபருக்கும் உரியதாக மாறிவிட்டது. எனவே, எரிபொருளானது தேவை ஏற்படுகிற அனைவருக்கும் நிச்சயமாக வழங்க வேண்டும்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "சர்வதேச உதவிகளோ அல்லது புதிய அரசாங்கத்தின் மூலமோ இந்த நாட்டின் அழிவைத் தடுக்க முடியாது. அதற்கு பிரதான காரணம் இந்த நாட்டின் அதிபரும், பிரதமரும் தான். இந்த நாடு அழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக அத்தியாவசியத் தேவையென்ற ரீதியில் ஒரு வரிசை, டோக்கனைப் பெற்றுக்கொள்ள ஒரு வரிசை என வரிசைகளின் எண்ணிக்கையே நீண்டு செல்கிறது. அதிபருக்கோ, பிரதமருக்கோ பொதுமக்கள் படும் துன்ப, துயரங்கள். தெரியாது. அவர்களும் இந்த வரிசைகளில் நின்றாலே மக்களின் துயரங்களை உணர்ந்து கொள்வார்கள்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE