இந்து கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், நடவடிக்கைககள் எடுக்காமல் தூங்கி கொண்டிருக்கின்றனரா? என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி காளத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 18.72 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட அவை முழுமையாக அகற்றப்படவில்லை என சீனிவாசன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி முனிஸ்வரர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என். மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், "பொன்னேரி காளத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 18 ஆக்கிரமிப்புகளில் 14 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ளவற்றை அகற்ற அவகாசம் வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள கோயிலுக்கு சொந்தமான 1,100 ஏக்கர் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன எனவும், அறநிலையத் துறையின் செயல்பாடுகள் குறித்து நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார்.
அரசு வழக்கறிஞரின் பதிலால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள் 'வரலாற்று சிறப்பு மிக்க பல்வேறு கோயில்கள் இன்னும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதற்கும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செயல்படாத நிலையே காரணம். 50 ஆண்டுகாலமாக உள்ள ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றாமல், இப்பொழுது வந்து கடந்த ஓராண்டாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறுவது ஏற்று கொள்ள முடியாது. கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய இந்து அறநிலையத் துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கி கொண்டு இருக்கிறது.
ஆக்கிரமிப்புகளை ஆரம்பத்திலேயே தடுத்த நிறுத்த வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வெறும் சம்பளத்தை மட்டும் வாங்கி கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று கடுமையாகச் சாடினர். அதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை மூன்று வாரங்கள் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.