4 பாடத்தில் தோல்வி... ஆறுதல்படுத்திய பெற்றோர்: தூங்கச் சென்ற பிளஸ்1 மாணவன் உயிரை மாய்த்த சோகம்

By காமதேனு

பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத வருத்தத்தில் மயிலாடுதுறையை சேர்ந்த மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை தனியூர் வாணியத் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் ரித்திஷ் கண்ணா (16) மயிலாடுதுறையில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வெளியான பதினோராம் வகுப்பு தேர்வு முடிவில் 4 பாடப்பிரிவுகளில் இவர் தேர்ச்சி பெறவில்லை. நேற்று பள்ளிக்கு சென்றவர், பள்ளி முடிந்து எப்போதும் போல் வீட்டுக்கு திரும்பினார்.

தான் தேர்வில் தேர்ச்சி அடைந்த விவரத்தை வீட்டில் கூறியுள்ளார். அதன்பின்னர் இரவு படுக்க சென்றுள்ளார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறியுள்ளனர். பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி தேர்வில் தோல்வி அடைந்த வருத்தத்தை வெளிக்காட்டிக் கொள்ளாத ரித்தீஷ் கண்ணா, தன் மனதுக்குள்ளேயே போட்டு புழுங்கியிருக்கிறார். அதனால் அந்த விபரீத முடிவை எடுத்திருக்கிறார். அவர் தூங்குகிறாரா என்று சிறிது நேரம் கழித்து அவரது பெற்றோர் அறைக்கு சென்று பார்த்தபோது அவர் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மயிலாடுதுறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனையடுத்து அங்கு வந்த போலீஸார் மாணவரின் உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெகு இயல்பாகப் பழகக் கூடியவரான ரித்தீஷ் கண்ணா இப்படி ஒரு முடிவை தேர்ந்தெடுத்திருப்பது அந்த குடும்பத்தினரையும், ஊர் மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE