சிங்கப்பூரில் மலர்ந்த காதல்... வாழப்பாடியில் டும் டும் டும்: தமிழ் பாரம்பரியப்படி மணமகளை கரம்பிடித்த பிரான்ஸ் மணமகன்

By காமதேனு

வாழப்பாடி சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவர் பிரான்ஸ் நாட்டு இளைஞரை காதலித்து, இருவீட்டார் சம்மதத்துடன் தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி காசி படையாச்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் கந்தசாமி- சுகந்தி தம்பதியரின் மூத்த மகள் கிருத்திகா. பொறியாளரான இவர், சிங்கப்பூரில் உள்ள பன்னாட்டு நிறுவனமொன்றில் வணிக மேம்பாட்டு துறை தலைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் இவரோடு பணிபுரிந்த பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்த பென்னடி - அட்மா ஊஜேடி தம்பதியரின் மகனான பொறியாளர் அசானே ஒச்சோயிட் என்ற இளைஞருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

இதுகுறித்து இருவரும் தங்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து திருமணம் செய்ய சம்மதம் பெற்றனர். ஆசானே ஒச்சோயிட் குடும்பத்தினர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் திருமணத்தை தமிழகத்திலேயே பாரம்பரிய முறைப்படி நடத்திடவும் சம்மதம் தெரிவித்தனர்.

அதனையடுத்து பிரான்ஸ் நாட்டில் ஆசானே ஒச்சோயிட் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே தமிழகத்திற்கு வந்தனர். மணமக்களுக்கு நேற்று சேலம் மாவட்டம், வாழப்பாடியில் தமிழர் பாரம்பரிய முறைப்படி பெண் அழைப்பு மற்றும் திருமணம் உள்ளிட்டவை நடைபெற்றது.

தமிழர் பாரம்பரிய முறைப்படி அர்ச்சகர்கள் வேதம் ஓத, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அக்னி சாட்சியாக நடைபெற்ற இத்திருமண விழாவில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மணமகன் ஆசானே ஒச்சோயிட், தனது காதலி கிருத்திகாவுக்கு தாலி கட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டார். திருமணத்திற்கு வந்திருந்த பிரான்ஸ் நாட்டினர், தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி- சட்டை, சேலை, தங்க ஆபரணங்கள், தோடு ஜிமிக்கி கம்மல் ஆகிய ஆபரணங்கள் அணிந்திருந்தனர்.

``தமிழர்களின் திருமண முறை எங்களை நெகிழவும், வியக்கவும் வைத்தது. இவர்களது விருந்து உபசரிப்பும், உணவுகளும் மிகவும் சுவையாக இருந்தது'' என பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆசானே ஒச்சோயிட் உறவினர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE