ஹாத்ரஸ் சம்பவத்தில் 6 பேர் கைது: எஃப்.ஐ.ஆரில் பாபாவின் பெயர் இல்லை!

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸில் 121 பேரை பலிவாங்கிய கூட்ட நெரிசல் சம்பவத்தில் 6 பேர் கைதாகி உள்ளனர். இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான தேவ்பிரகாஷ் மதுக்கர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று காவல் துறை அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் பிரச்சாரக் கூட்டம் நடத்திய நாரயண் சாக்கா விஷ்வ ஹரி போலே பாபாவால் 121 உயிர்கள் பலியாகின. இச்சம்பவம் தொடர்பாக, பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்திய குற்றப் பிரிவுகளின் மீது105, 110, 126(2), 223, 238 ஆகிய வழக்குகள் நேற்று பதிவாகின. இதன் முக்கியக் குற்றவாளியான தேவ்பிரகாஷ் மதுக்கர் மற்றும் பெயர் தெரியாத சிலர் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவர்களில் ஆறு பேரை இன்று காலை அலிகர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களில் மெயின்புரியை சேர்ந்த ராம் லடாத்தே, ஏட்டாவின் உபேந்திரா சிங் யாதவ், ஹாத்ரஸிலிருந்து முகேஷ் குமார் மற்றும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கியக் குற்றவாளியான தேவ்பிரகாஷ் மதுக்கர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று அலிகர் பகுதியின் ஐஜியான ஷலாப் மாத்தூர் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ஐஜி ஷலாப் கூறும்போது, ‘மேலும் 12 பேர் பிடிக்கப்பட்டு அவர்களிடமும் விசாரணை நடைபெறுகிறது. இந்தச் சம்பவத்திற்கு போலே பாபாவும் காரணம் என அறியப்பட்டால் அவரிடமும் விசாரணை நடத்தப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்று நடத்தப்பட்ட கூட்டத்துக்கும் போலே பாபா தன் பெயரில் அனுமதி பெறவில்லை. அவருடைய ஆசிரமங்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களும் பாபாவின் பெயரில் இல்லை. இதுபோன்ற காரணங்களால் போலே பாபாவின் பெயர் இன்னும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என உபி காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பலியான 121 பேரிகளில் 112 பெண்கள், 2 ஆண்கள் 6 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகளும் இருந்துள்ளனர். பலியானவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் பிரதமர் நரேந்திரமோடி தலா ரூ.2 லட்சம் அறிவித்துள்ளார். உபி அரசும் தலா ரூ.2 லட்சம் மற்றும் காயப்பட்டவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில், சம்பவத்துக்கு பின் தலைமறைவான போலே பாபா தனது மெயின்புரி ஆசிரமத்தில் மறைந்திருப்பதாகத் தெரிகிறது. இதன் வாசல்கள் முன்பு காவலுக்கு இருக்கும் உபி போலீஸாரிடம் வந்த ஒரு கிராமவாசிகள் கும்பல் ஆர்ப்பாட்டம் நடத்திச் சென்றுள்ளனர். இதில், பாபாவை கைது செய்யக் கூடாது எனவும், அவர் மீது எந்த தவறும் இல்லை என்றும் கூறிச் சென்றுள்ளனர். இதன்மூலம், 121 பலியான சம்பவத்துக்குப் பிறகும் போலே பாபா மீது அப்பாவி கிராமவாசிகள் நம்பிக்கை தொடர்வதாகக் கருதப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE