வாட்டி வதைத்த கடன் தொல்லை: தாய் எடுத்த விபரீத முடிவால் குடும்பத்தில் நேர்ந்த சோகம்!

By காமதேனு

கடன் தொல்லை காரணமாக விஷம் அருந்தி தாய் மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்டனர். மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தேனி மாவட்டம் வருசநாடு சாந்திபுரத்தைச் சேர்ந்தவர்கள் நல்லு, ஆண்டிச்சியம்மாள் (35) தம்பதி. இவர்களுக்கு காவ்யா(17) என்ற மகளும், கிருஷ்ணகுமார்(15) என்ற மகனும் இருந்தனர். தனக்குச் சொந்தமான தோட்டத்தை மனைவிக்கு தெரியாமல் வேறு ஒருவருக்கு நல்லு குத்தகைக்கு விட்டுள்ளார். இதனால், இருவருக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக ஆண்டிச்சியம்மாள் தனது மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

அத்துடன் கறவை மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், குடும்பத் தேவைகளுக்காகவும், தனது குழந்தைகள் படிப்புக்காகவும் பலரிடம் கடன் வாங்கி இருந்துள்ளார். ஆனால், போதிய வருவாய் கிடைக்காததால் கடனை சரிவர செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.

இதனால் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுக்கவே தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். இதையடுத்து ஆண்டிச்சியம்மாள், விஷத்தை குடித்துவிட்டு, தனது குழந்தைகளுக்கும் விஷத்தை கொடுத்துள்ளார்‌. இந்நிலையில், இன்று காலை தோட்டத்தில் ஆண்டிச்சியம்மாள், அவரது 2 குழந்தைகளும் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அவர்களை மீட்டு அனுப்பி வைத்தனர். ஆனால், ஆண்டிச்சியம்மாள் மற்றும் அவரது மகள் காவ்யா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கிருஷ்ணகுமாருக்கு தேனி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த வருசநாடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE