உயர்கல்வி மாணவிகளுக்கு 1000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தில், ஊக்கத் தொகை பெறுவதற்கான மாணவிகளின் தகுதிகளை தமிழக அரசு தெளிவுபடுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்றவர்கள், கலை அறிவியல், பொறியியல், பட்டயப் படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இல்லாமல் படிப்பை முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். இதன் படி கடந்த 25-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. முதல் நாளிலேயே 15000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்தனர். கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், அவர்களும் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் அடுத்த மாதம் முதல் வாய்ப்பு வழங்கப்படும் என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே யாருக்கெல்லாம் 1000 ரூபாய் ஊக்கத் தொகை கிடைக்கும் என்பதில் மாணவிகளுக்கிடையே குழப்பம் இருந்து வந்தது. இந்நிலையில் உயர் கல்வித்துறை சார்பாக அதற்கான விளக்கத்தை தற்போது அளித்துள்ளார்கள். அதில், ”தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருக்க வேண்டும். தனியார்ப் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் 6 முதல் 8 வரை படித்த பிறகு அரசுப் பள்ளியில் படித்தவர்களும் இந்த திட்டத்தில் கீழ் விண்ணப்பிக்க முடியும். இளநிலை படிப்புகளுக்கு மட்டுமே 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.
தற்போது இளநிலை படிப்புகளில் பயின்று வரும் மாணவிகளும் பயன்பெறலாம். 2021-2022 கல்வியாண்டில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் இந்த திட்டத்தில் பயன்பெற இயலாது. ஏற்கெனவே பல்வேறு உதவித் தொகைகளை மாணவிகள் பெற்று வந்தாலும் தற்போது வழங்கப்படும் 1000 ரூபாய் வழங்கப்படும். திட்டம் தொடர்பான சந்தேகம் ஏற்படுபவர்கள் 14417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். விண்ணப்பங்களை www.penkalvi.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தொலைதூர கல்வி, திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது” எனத் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.