புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ரஷ்யா மற்றும் ஆஸ்திரியாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
22-வது இந்தியா - ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டை நடத்துவதற்காக அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி வரும் ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் ரஷ்யா செல்கிறார். ரஷ்யா உச்சி மாநாட்டு நிகழ்வை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி ஜூலை 9, 10 ஆகிய தேதிகளில் ஆஸ்திரியாவுக்குச் செல்கிறார்.
பிரதமரின் பயணம் தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், "பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 8-10 தேதிகளில் ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் ஆஸ்திரியா குடியரசுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்கிறார். இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளின் முழு வரம்பையும் தலைவர்கள் மதிப்பாய்வு செய்வார்கள். மேலும் பரஸ்பர விருப்பத்தில் சமகால பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொள்வார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷ்யா, உக்ரைன் மீது ராணுவத் தாக்குதலைத் தொடங்கிய பிறகு, பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர் 2019-ம் ஆண்டில் ரஷ்யாவின் கிழக்கு நகரமான விளாடிவோஸ்டாக்கில் நடந்த பொருளாதார மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கடைசியாக ரஷ்யா சென்றிருந்தார்.
பிரதமர் மோடியின் ஆஸ்திரிய பயணமானது கடந்த 41 ஆண்டுகளில் அந்நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணமாக அமைய உள்ளது. வியன்னாவில், பிரதமர் மோடி ஆஸ்திரியா அதிபர் அலெக்சாண்டர் வான் டெர் பெல்லியை சந்தித்து பேச உள்ளார்.
அதன் பிறகு அந்நாட்டின் பிரதமர் கார்ல் நெஹம்மருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர், பிரதமர் மோடியும், கார்ல் நெஹம்மரும் இரு நாடுகளைச் சேர்ந்த வணிகத் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர்.