’ஓய்வூதியர்கள் இனி அலைய வேண்டாம்’: வீட்டில் இருந்தபடியே ஆயுள் சான்றுக்கு சமர்ப்பிப்பது எப்படி?

By காமதேனு

அரசுப்பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்களும், வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் பெறுவோரும் தங்களது வாழ்வு சான்றிதழை சமர்பிக்க கருவூலம், பி.எப் அலுவலகம் என சான்று சமர்பிக்க அலைவது வழக்கம். இனி அந்த நடைமுறையையே மாற்றியமைத்து, வீட்டில் இருந்தபடியே வாழ்வு சான்றிதழ் சமர்பிக்கும் நடைமுறையை செயல்படுத்தி வருகிறது அஞ்சல் துறை.

அரசுப்பணியில் இருந்து ஓய்வுபெற்றோருக்கும், பி.எப் பென்சன் வாங்குவோரும் தாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதை ஆண்டுக்கு ஒருமுறை ஆவணமாக சமர்பிக்கவேண்டும். அந்தவகையில் வயதானவர்கள் நேரடியாக அலைவதைத் தவிர்க்கும்வகையில் அஞ்சல் துறை வீட்டிலேயே வந்து வாழ்வு சான்றிதழை பெறும் நடைமுறையைச் செயல்படுத்தி வருகிறது. வரும் ஜூலை 1-ம் தேதி முதல் வாழ்வு சான்றிதழ் கொடுக்கும் காலம் தொடங்கும் நிலையில் வீட்டில் இருந்தே வாழ்வு சான்றிதழ் கொடுப்பது எப்படி என விளக்குகிறார் சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன்.

இதுகுறித்து நடராஜன் கூறுகையில், “கடந்த இரு ஆண்டுகளாக கரோனா தொற்று இருந்ததால் வாழ்வு சான்றிதழ் கொடுப்பதில் இருந்து தமிழக அரசு விலக்கு அளித்திருந்தது. ஆனால் நிகழாண்டில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் 7,15,761 பேர் வாழ்வு சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம் நேரில் போய் சான்று சமர்பிக்க முடியாதவ்ர்கள் வீட்டில் இருந்தே இதைச் சமர்பிக்கும் வசதியை அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது.

அருகாமை தபால்காரரிடம் தகவல் சொன்னால், வீட்டிற்கே வந்து வாழ்வு சான்றிதழ் சமர்பிக்கும் நடைமுறையைச் செய்வார். இதற்கு 70 ரூபாய் மட்டுமே கட்டணம் ஆகும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், செல்போன் எண், பிபிஓ எண், ஓய்வூதியக் கணக்கு எண்ணைக் கொடுத்து, கைவிரல் ரேகையைப் பதிவு செய்வதன்மூலம் டிஜிட்டல் சான்றிதழை சமர்பிக்க முடியும்.”என்றார்.

வயதான முதியோர்கள் ஆட்டோ பிடித்து சென்று, மணிக்கணக்கில் காத்திருப்பதை விட வீட்டில் இருந்தே இணைய வழியில் சான்றிதழ் சமர்பிக்கும் இந்த நடைமுறை பென்சன்தாரர்களுக்கான வரப்பிரசாதமே!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE