ஆசையா தொடங்குன தொழில கைவிட மனசு வரல!

By வீரமணி சுந்தரசோழன்

இந்தப் பக்கம் கணினியில் தட்டச்சு செய்தால் அந்தப் பக்கம் பிரின்டரில் டாக்குமென்ட் வந்து விழும் இந்த நவீன காலத்திலும் எழுத்துகளை ஒவ்வொன்றாய் எடுத்துக் கோத்து அச்சடிக்கும் லெட்சுமி பிரஸ் தஞ்சையில் உயிர்ப்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

முன்பெல்லாம் ஒவ்வொரு எழுத்தாகக் கோத்து, வார்த்தைகளை உருவாக்கி, வடிவமைப்பு செய்துதான் திருமண பத்திரிகைகள், போஸ்டர்கள், நோட்டீஸ்கள் உள்ளிட்டவற்றை அச்சடிக்க வேண்டும். அன்றைய நாட்களில் அச்சு பிரஸ்கள் என்பதே அரிதினும் அரிது. ஆனால், ஆப்செட் பிரஸ்கள், டிஜிட்டல் பிரஸ்கள் வருகைக்கு பிறகு பழைய எழுத்து அச்சுக் கோக்கும் பிரஸ்கள் கிட்டத்தட்ட வழக்கொழிந்து விட்டன. ஆனாலும், அச்சுக்கோக்கும் பிரஸ்சை இன்னும் விடாப்பிடியாக ஓட்டிக் கொண்டிருக்கிறார் மோகன். மிகவும் நலிவடைந்த நிலையில் தொழில் இருந்தாலும் நம்பிக்கையுடன் படபடத்துக் கொண்டிருக்கிறது தஞ்சை கீழவாசல் பகுதியில் இருக்கும் இவரது லெட்சுமி பிரின்டர்ஸ்.

லெட்சுமி பிரின்டர்ஸ்...

தடதடக்கும் லெட்சுமி பிரஸ்சை ஒரு சுற்று வலம் வந்துவிட்டு மோகனுக்கு எதிரில் போய் உட்கார்ந்தோம். அச்சுத் தொழிலுக்கு வந்த கதையை ஆர்வமுடன் பேசத் தொடங்கினார்

“என்னோட தாத்தாவும் அண்ணன்களும் அந்தக் காலத்துல தஞ்சை வெற்றிவேல் பிரஸ்ல வேலை பார்த்தாங்க. அவங்களப் பாத்துத்தான் நானும் அச்சுக் கோக்க ஆரம்பிச்சேன். ஓரளவுக்கு தொழிலைக் கத்துக்கிட்டு 1986-ல் எங்க வீட்டிலேயே சின்ன அளவுல அச்சுக் கோக்கும் பிரஸ்சைத் தொடங்கினேன். அதுக்கு டிரிடில் பிரஸ்னு பேரு. தொழில் ஓரளவுக்கு பிக்கப் ஆனதும் ரெண்டே வருசத்துல வீட்டுக்குக்கு முன்னாடியே இந்த லெட்சுமி பிரஸ்சைத் தொடங்கிட்டேன்.

அப்ப தஞ்சையில் மொத்தமே 14 பிரஸ்கள் தான் இருந்துச்சு. எங்க பிரஸ்ல முதன் முதலில் டெம்மி ஃபோலியோ என்ற மெஷினைத்தான் பயன்படுத்துனோம். பிற்பாடுதான் கிரவுன் என்ற மெஷினை வாங்குனோம். அப்பெல்லாம் மெஷினை ஓட்ட மோட்டர் வசதி கிடையாது; காலால மிதிச்சுத்தான் ஓட்டணும். அப்படி ஓயாம கால்ல மிதிச்சு ஓட்டுனதுல எனக்கு குடலிறக்கம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை வரைக்கும் போயிருச்சு. இருந்தாலும் தொழிலை விடமுடியல.

உடல் உழைப்பு தான் இந்த வேலைக்குப் பிரதானம். ராப் பகலா உழைக்கணும். 1995 வரைக்கும் எங்களுக்குப் பொழப்பு நல்லபடியாத்தான் போயிட்டு இருந்துச்சு. அப்ப எங்கக்கிட்ட 4 மெஷின்கள் ஓடுச்சு. 10 பேர் வேலை பாத்தாங்க. எந்நேரமும் பரபரப்பா இயங்கிட்டு இருப்போம். ஆனா, இப்ப...” என்று முற்று வைக்காமல் நிறுத்தினார் மோகன்.

அச்சுக் கட்டைகளுடன் மோகன்...

மோகன்

கணினி வளர்ச்சி அச்சு கோப்பு இயந்திரங்களுக்கும் ஓய்வுகொடுத்துவிட்ட போதும் இன்றைக்கும் சிலர் மோகனின் அச்சகத்தைத் தேடி வந்துகொண்டு தான் இருக்கிறார்கள். அதனால் தான் ஓரளவுக்கு பிழைப்பு ஓடுவதாகச் சொல்லும் மோகன், இந்த அச்சகம் செயல்படும் முறை குறித்து நமக்கு விளக்கினார்.

“இங்க இருக்கிற சின்னச் சின்னப் பெட்டிகள்ல ஒவ்வொரு அளவிலான எழுத்துகளை வெச்சிருப்போம். 6 பாயின்ட் முதல் 24 பாயின்ட் வரையிலான எழுத்துகள் அதுல இருக்கும். 24 பாயின் டை 2 எம் என்றும், 36 பாயின்டை 3 எம் என்றும் சொல்வோம், இதுபோல 16 எம் வரையிலான அளவுகளில் எழுத்துகளை கோத்துப் பயன்படுத்துவோம். தேவைப்பட்டா பயன்படுத்த தலைவர்கள், சினிமா ஸ்டார்ஸ், சாமி படங்களையும் வெச்சிருக்கோம்.

இந்த கட்டைகள் மரத்திலும், எழுத்துகள் ஈயம் மற்றும் காரீயத்திலும் செய்யப்பட்டிருக்கும். எழுத்து அச்சில் பெரும்பாலும் எல்லா வண்ணங்களையும் கொண்டுவர முயற்சி செய்வோம். சிவப்பு, ஊதா, பச்சை, அரக்கு, கருப்பு, மயில் வண்ணம், வெள்ளை, மஞ்சள், கத்திரிப்பூ நிறம் என எல்லா வண்ணங்களையும் பயன்படுத்துவோம்.

முன்ன எல்லாம் திருமண பத்திரிகைகள், நோட்டீஸ்கள், பில்புக்ஸ் தான் அதிகமா பிரின்ட் ஆகும். கடந்த 20 வருசத்துக்கு முந்தி ஆப்செட், டிஜிட்டல் பிரிண்டர்ஸ் வர ஆரம்பிச்சுது. அத்தோட எங்க பிரஸ்சுக்கு வர்ற கூட்டம் அடியோட குறைஞ்சு போச்சு. கடைசியா, 12 வருசத்துக்கு முந்தி ஒரு திருமண பத்திரிகை அடிச்சேன்; அவ்வளவுதான்” என்று பெருமூச்சுவிட்டார் மோகன்.

எழுத்துகளை கோக்கும் மோகன்...

நோட்டீஸ் அச்சு உருவாக்குதல்...

இந்த அச்சகத்துக்கு தேவையான மெஷின்களையும் பாகங்களையும் பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலிருந்து தான் வாங்குகிறார்களாம். இன்றைய தேதிக்கு ஒரே ஒரு டிரிடில் மெஷினும் கட்டிங், பைண்டிங் மெஷின்கள் தலா ஒன்றும் மோகனின் அச்சகத்தில் தம்பிடித்து ஓடிக்கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் அச்சு எழுத்துக் கட்டைகளைச் செய்துகொடுக்க உள்ளூரிலேயே ஆட்கள் இருப்பார்களாம். ஆனால், இப்போது இதையெல்லாம் மதுரை, பரமக்குடி பக்கமிருந்துதான் வாங்க வேண்டி இருக்கிறதாம்.

அச்சகத்தின் இப்போதைய நிலவரத்தை நமக்குச் சொன்ன மோகன் அந்தக் காலத்து மலரும் நினைவுகளையும் அசைபோட்டார். “அப்பெல்லாம் பெரும்பாலும் அச்சகம் எந்நேரமும் பரபரப்பா இருக்கும். நாங்க பெரும்பாலும் அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அடிக்க மாட்டோம். ஏன்னா... அதுக்கு போலீஸ் பர்மிஷன் அது இதுன்னு ஏகப்பட்ட பார்மாலிடீஸ் இருக்கும். அரசியல்வாதிகட்ட அவ்வளவு ஈசியா பணமும் வாங்கமுடியாது. இதுக்காகவே பெரும்பாலும் தவிர்த்திருவோம்.

தீபாவளி, பொங்கல் சமயத்துல வர்த்தக நிறுவனங்கள் சார்பில் அதிகமா நோட்டீஸ் அடிப்பாங்க. புதுப் படங்கள் ரிலீஸ் ஆனாலும் ரசிகர்கள் போஸ்டர் அடிக்க வருவாங்க. அது மாதிரியான நேரங்கள்ல 24 மணி நேரம்கூட எங்களுக்குப் போதாது. அவ்வளவு வேலை இருக்கும். 1997-க்குப் பிறகு எல்லாமே ஆப்செட் யுகமாகிப் போய் எங்கள மாதிரி அச்சகங்களுக்கு பொழப்புப் போயிருச்சு.

அச்சு மெஷின்

கடந்த பத்து வருசமா பாலித்தீன் பைகள்ல பிரின்ட் பண்ணிட்டு இருந்தோம். பாலித்தீன் பைகளுக்கு தடைவிதிச்சதால அந்தப் பொழப்பும் போச்சு. இப்ப, துணிப்பை, நான்-ஓவன் பைகள்ல பிரின்ட் பண்ற வேலைதான் போயிட்டு இருக்கு. அப்பப்ப பில் புக் வேலைகளும் வரும். ஒரு காலத்துல 10 பேர் வேலை செஞ்ச இந்த அச்சகத்துல இப்ப நானும் இன்னொரு பையனும் தான் இருக்கோம். ஆசை ஆசையா தொடங்கின தொழில்ங்கிறதால என்ன கஷ்டம் வந்தாலும் இதை கைவிட மனசே வரல.

எங்க தொழில் மறுபடி புத்தெழுச்சி பெறணும்னா அது மக்கள் கையில தான் இருக்கு. இளைஞர்கள் எத்தனையோ விஷயங்கள்ல பாரம்பரியத்தை மீட்டுட்டு வர்றாங்க. அந்த வகையில அச்சுத் தொழிலோட பாரம்பரியத்தையும் மீட்டெடுக்க அவங்க முன்வரணும். அரசும் இந்தத் தொழிலை ஊக்குவிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கணும்” என்று முடித்தார் மோகன்.

அச்சகர் மோகனின் கோரிக்கை கேட்க வேண்டியவர்களின் காதுகளில் சத்தமாய் விழட்டும்!

படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE