பிஹாரில் 15 நாட்களில் இடிந்து விழுந்த 10 பாலங்கள்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

By KU BUREAU

புதுடெல்லி: பிஹார் அரசு அங்குள்ள பாலங்களின் கட்டமைப்புகளை ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரியும், அதன் அறிக்கையின்படி பலவீனமான அல்லது சீரமைக்கக்கூடிய பாலங்களை கண்டறிய நிபுணர் குழு அமைக்க உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிஹார் மாநிலத்தில் கடந்த 15 தினங்களுக்குள் சிவம், சாரண், மதுபானி, அராரியா, கிழக்கு சம்பரன் மற்றும் கிஷன்கஞ்ச் மாவட்டங்களில் 10 பாலங்கள் இடிந்துவிழுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் தற்போது பெய்துவரும் மழையும் இந்த பாலம் இடிந்து விழுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, பிஹாரில் உள்ள பாலங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று வழக்கறிஞரான பரஜேஸ் சிங் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். தனது மனுவில் அவர், "இந்தியாவில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக பிஹார் இருப்பது கவலை அளிக்கக்கூடிய ஒரு விஷயமாக உள்ளது. மாநிலத்தில் 68,800 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் மொத்த பரப்பளவில் 73.06 சதவீதமாகும்.

எனவே பிஹாரில் பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் மிகவும் பேரழிவை ஏற்படுத்துகின்றன. ஏனெனில், பெரிய அளவிலான மக்களின் உயிர்கள் அபாயத்தில் உள்ளன. அதனால், கட்டுமானத்தில் இருக்கும் பாலங்கள் அதன் பணிகள் முடிவதற்கு முன்பாகவே இடிந்து விழுவது வழக்கமாகிவிட்ட நிலையில், மக்களின் உயிர்களைத் காப்பதற்காக இந்த நீதிமன்றம் உடனடியாக தலையிட வேண்டியது இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மாநிலங்களில் உள்ள கட்டிட கட்டமைப்புகளை ஆய்வு செய்ய உயர் மட்ட நிபுணர் குழுவை அமைத்திடவும், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் அளவுகளின் படி பாலங்களின் உறுதித் தன்மையினை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இதனிடையே, பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவங்களைத் தொடர்ந்து, மாநில முதல்வர் நிதிஷ் குமார் அனைத்து பழைய பாலங்களை ஆய்வு செய்து எவை உடனடியாக சீரமைக்க வேண்டிய பாலங்களை அடையாளம் காண ஆய்வு நடத்தும்படி மாநில சாலை உருவாக்கம் மற்றும் ஊரகத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE