காப்பாற்றுமா ‘கந்துவட்டி ஆபரேஷன்’?

By கவிதா குமார்

இப்போதெல்லாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு மனு கொடுக்க வருகிறவர்களில் பலர் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் தான் வருகிறார்கள். வந்த வேகத்தில், மனு கொடுக்கிறார்களோ இல்லையோ... தலையில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்கத் துணிகிறார்கள். காரணம், கந்துவட்டி கொடுமை. கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இப்படி பத்துக்கும் மேற்பட்டோர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

கந்துவட்டி கொடுமையால் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற குடும்பம்...

தமிழகத்தில் கரோனா காலத்திற்குப் பிறகு ஏற்பட்ட தொழில் நசிவு, வேலையிழப்பு எண்ணற்றோரின் வாழ்க்கைச் சூழலை தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. இருந்த வேலையும் பறிபோனதால், கிடைக்கும் வேலையைச் செய்யும் நிலைக்கு லட்சக்கணக்கானோர் தள்ளப்பட்டுள்ளனர். தங்கள் பிள்ளைகளின் படிப்புச் செலவு, பெற்றோர், குடும்பத்தாரின் மருத்துவச் செலவு போன்ற நெருக்கடிகள் கழுத்தை நெரிப்பதால், கடனாக அக்கம் பக்கத்தில் வாங்கும் நிலை பலரை தற்கொலைப் பள்ளத்தில் தள்ளி வருகிறது. அதற்கு சமீபத்திய உதாரணம், ஆயுதப்படை காவலர் செல்வக்குமார்.

செல்வக்குமார்

விஷம் அருந்தித் தற்கொலை


புவனகிரி அருகே உள்ள மதுவானைமேடு குறிஞ்சிக்கொல்லையைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (27). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை 10-வது பட்டாலியனில் காவலராக பணியாற்றி வந்தார். ஜூன் 1-ம் தேதி கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே சாலையில் நடந்து சென்ற செல்வக்குமார், திடீரென மயங்கி விழுந்தார். இவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வக்குமார் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

கந்துவட்டி அனிதா

பெரியநெல்லிக்கொல்லையைச் சேர்ந்த அனிதா என்பவரிடம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூ.5 லட்சத்தை கடனாக வாங்கியுள்ளார் செல்வக்குமார். அதற்காக அப்போது 20 ரூபாய் பத்திரத்தில் அவர் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளார். வாங்கிய பணத்தை 6 மாதங்களுக்கு முன்பு அசலும் வட்டியுமாய் செல்வக்குமார் திருப்பிக் கொடுத்துவிட்டாராம். கடனை அடைத்ததும் பத்திரத்தைத் திருப்பிக் கேட்டிருக்கிறார். ஆனால், தன்னிடம் 12 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாக அந்தப் பத்திரத்தில் அனிதா எழுதியிருப்பது அப்போதுதான் தெரிந்திருக்கிறது. மொத்தப் பணத்தையும் திருப்பித் தராவிட்டால் போலீஸ் வேலையைக் காலிபண்ணிவிடுவதாக அனிதா மிரட்டி இருக்கிறார். அதற்குப் பயந்து, செல்வக்குமார் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

செல்வக்குமார் தற்கொலை விவகாரம் தமிழகத்தில் கடும் அதிர்வை ஏற்படுத்தியது. கந்துவட்டி கொடுமைக்கு காவல் துறையில் உள்ள ஒருவரே தற்கொலை செய்துகொள்ளும் போது எளிய மக்கள் என்ன செய்வார்கள் என்ற விமர்சனங்கள் வெடித்ததை அடுத்து, கந்துவட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட டிஜிபி சைலேந்திரபாபு, ‘ஆபரேஷன் கந்துவட்டி’ என்ற சிறப்புத் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

சைலேந்திரபாபு

இதையடுத்து, கந்துவட்டி தொடர்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் 124 புகார்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு 89 புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்து 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்த நடவடிக்கைகள் கந்துவட்டிக்காரர்களை பெரிதாக ஒன்றும் செய்யாது என்கிறார் மதுரையைச் சேர்ந்த சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் வழக்கறிஞர் சி.சே.இராசன்.

சி.சே.இராசன்

“ கந்துவட்டி கொடுமையை ஒழிக்க கடந்த 2003 நவம்பர் 14-ம் தேதி தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டப்படி, வியாபார நோக்கில் ஆண்டுக்கு 18 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிப்பது குற்றம். அதே போல தனி உபயோகத்திற்காக 12 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிப்பதும் குற்றமாகும். மேலும், அதீத வட்டி வசூலிப்பவர்களுக்கு மூன்றாண்டு கடுங்காவல் தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கலாம்.

ஆனால், இந்தச் சட்டம் கந்துவட்டிக்காரர்களிடம் பெரிதாகச் செல்லுபடியாவதில்லை. ஏனென்றால், தமிழகம் முழுவதும் கந்துவட்டிக்காரர்கள் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். அது ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்கட்சியாக இருந்தாலும் சரி. அதனால் தான் கந்துவட்டித் தொழில் காவல்துறை பாதுகாப்புடன் நடக்கிறது. சட்டப்படி போனாலும் காவல்துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. கந்துவட்டிக் கொடுமையால் நடக்கும் தற்கொலைகள் குறித்து அவ்வப்போது அரசு கவலை கொள்கிறதே தவிர, சீரியஸாக நடவடிக்கை எடுப்பதில்லை” என்று குற்றம் சாட்டினார் இராசன்.

தொடர்ந்து பேசிய அவர், “கந்துவட்டிக்காரர்கள் தான் முக்கிய கட்சிகளுக்கு நிதி கொடுத்து அவர்களை இயக்குபவர்களாக உள்ளனர். இது மிகவும் ஆபத்தான விஷயம். கரோனா காலத்திற்குப் பிறகு வறுமை நிலை அதிகரித்துள்ளது. அதனால் மக்களின் தேவை அதிகரித்துள்ளது. நோய் வந்தால் மருத்துவமனைகளுக்குப் பெரும் செலவு செய்ய வேண்டியதுள்ளது. கல்வி நிலையங்களும் வியாபார நிலையங்களாக மாறிவிட்டன. இதையெல்லாம் சமாளிக்க முடியாதவர்கள் கடன் வாங்கிச் சிக்கிக் கொள்கின்றனர்.

எனவே, தமிழக அரசு வறுமை ஒழிப்புத்திட்டத்தை வேகமாக செயல்படுத்த வேண்டும். அதற்கு தேசிய உடமை வங்கிகள் மூலம் கடன் வழங்கும் திட்டங்களை எளிமைப்படுத்த வேண்டும். குறிப்பாக, இலவசங்களுக்குச் செலவிடும் கோடிகளை தொழில் வளர்ச்சிக்கோ, புதிய கம்பெனிகளை உருவாக்கவோ செலவிட வேண்டும். இதன் மூலம் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலையை உத்தரவாதப்படுத்த முடியும். அதனால் கடன் வலையில் இருந்து ஏழை, எளிய மக்களைக் காப்பாற்ற முடியும்” என்றார்.

கே.பாலகிருஷ்ணன்

கேரளா போல மாற வேண்டும்

உழைக்கும் மக்களைச் சுரண்டும் கந்துவட்டிக் கொடுமைகள் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, “கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட பலர் புகார் தர முன்வருவதில்லை. காரணம், அவர்கள் வாங்கியது ஒரு தொகையாகவும் பத்திரத்தில் எழுதியிருப்பது வேறு தொகையாகவும் இருக்கும். மேலும், கந்துவட்டிக் கும்பல் அரசியல் பின்புலத்தைப் பயன்படுத்துவார்கள் என்ற பயமும் காரணமாக உள்ளது. கந்துவட்டிக் கும்பலுக்கு காவல் துறையும் வளைந்து கொடுக்கிறது. சட்டப்படி அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் ‘கேரளா பேங்க்’ என்ற ஒரு வங்கியை கேரள அரசு தொடங்கியுள்ளது. அதன் மூலம் மக்களின் அன்றாடத் தேவைகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. அது போல தமிழகத்திலும் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க அரசு முன்வர வேண்டும். ஏனெனில், ஏழை, எளிய மக்கள் கடன் வாங்க தமிழகத்தில் கந்துவட்டிக்காரர்களை விட்டால் மாற்று வழி இல்லை” என்றார்.

“கந்துவட்டியால் குடும்பமே தீக்குளித்த சம்பவம், இந்த ஆட்சி நிர்வாகம் ஸ்தம்பித்து போயிருப்பதற்கு உதாரணம்” என்று அதிமுக ஆட்சியில் அலாரம் அடித்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அவரது ஆட்சியிலும் அந்த அவலம் தொடர் அனுமதிக்கலாமா?

பெட்டிச் செய்தி:

தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள்!

வியாபாரிகள், அன்றாட தினக்கூலிகள், நடைபாதை வியாபாரிகள் கந்துவட்டிக் கும்பலுக்கு இரையாகி வரும் நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் பலர், தனியார் பைனான்ஸ் நிறுவனங்களின் கடன் வலையில் சிக்கி வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு ராமேஸ்வரம் தாலுகா பாம்பனைச் சேர்ந்த மீனவர் கென்னடி ஜூன் 8-ம் தேதி ஒரு புகார் மனுவை அனுப்பியுள்ளார். அதில், ‘தங்கச்சிமடம் பகுதியில் இயங்கும் ஒரு பைனான்சில் 2016-ம் ஆண்டு 5 லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். 21 மாத கால தவணையாக 4 லட்சத்து 35 ஆயிரத்து 750 ரூபாய் செலுத்தினேன். மேலும், நான் கேட்காமலேயே மேலும் 5 லட்ச ரூபாய் தருகிறேன் என்றார்கள். வேண்டாம் என்ற போதும், கட்டாயப்படுத்தி கையெழுத்துப் பெற்றனர். அதன் பின் என் வங்கிக் கணக்கில் 1.80 லட்ச ரூபாய் செலுத்தினார்கள். இது தொடர்பாக கேட்டபோது, முந்தைய லோன் 5 லட்சத்திற்கு வட்டியாக 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டதாகக் கூறினார்கள். நான் லோன் வேண்டாம் என்று கூறியும், உங்கள் பெயருக்கு வந்த பணத்தை திருப்பி அனுப்ப முடியாது என்றார்கள். நீங்கள் பணத்தை எடுக்காவிட்டால், வட்டியாக எடுத்துக் கொள்வோம் எனறார்கள். இதனால் 1.80 லட்ச ரூபாயை எடுக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. இதற்காக 2.78 லட்ச ரூபாய் செலுத்தியுள்ளேன். கரோனா பாதிப்பாலும், உடல் நல பாதிப்பாலும் பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வட்டியுடன் சேர்ந்து 8 லட்ச ரூபாய் கட்டச் சொல்லி மிரட்டுகிறார்கள். சுனாமி மறுகட்டமைப்பு மூலம் முன்னாள் முதல்வர் கருணாநிதி கட்டிக்கொடுத்த சுனாமி வீட்டை ஜப்தி செய்வோம் என்று மிரட்டுகின்றனர். எனது வீட்டுப்பத்திரத்தை மீட்டுத் தருவதுடன், எங்களை ஏமாற்றி தற்கொலைக்குத் தூண்டி வரும் இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இவரைப்போல இன்னும் பல மீனவர்கள் அந்த பைனான்ஸ் நிறுவனத்தில் கடன்பட்டு நிற்கிறார்கள் என்பதையும் அரசின் கவனத்துக்கு கொண்டுவருகிறது காமதேனு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE