மாணவர்களே ஜுன் 30 வரை பதிவு செய்யலாம்: ரூ.1000 ஊக்கத் தொகை வேண்டி ஒரே நாளில் 15,000 மாணவிகள் விண்ணப்பம்!

By காமதேனு

உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு முதல் நாளிலேயே 15,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்றவர்கள், கலை அறிவியல், பொறியியல், பட்டயப் படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இல்லாமல் படிப்பை முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். பெண்கள் உயர் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம்மாள் பெயரில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் மூன்று லட்சம் மாணவிகள் பயன் பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று முதல் வரும் 30-ம் தேதிவரை சிறப்பு முகாம்களில் மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில், ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு, கல்விச் சான்று ஆகியவற்றுடன் மாணவிகள் விண்ணப்பம் செய்தனர். இந்த திட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் ஊக்கத் தொகைக்காக விண்ணப்பித்திருக்கிறார்கள். கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், அவர்களும் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் அடுத்த மாதம் முதல் வாய்ப்பு வழங்கப்படும் என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE