`கிலோவுக்கு 150 ரூபாய் வழங்கவும்'- தேங்காய்களை உடைத்து போராட்டம் நடத்திய விவசாயிகள்!

By காமதேனு

தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னை விவசாயிகள் இன்று பட்டுக்கோட்டையில் தேங்காய் உடைப்பு போராட்டத்தை நடத்தினர்.

தென்னை விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். உரித்த தேங்காய்களை அரசே கொள்முதல் செய்யவேண்டும். கொப்பரைத் தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 150, உரித்த தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 50 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னை விவசாயிகள் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தென்னை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம், அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை அருகே தேங்காய் உடைப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் கைகளில் ஏந்தி வந்த தேங்காயை சாலையில் உடைத்து போராட்டம் நடத்தினர். முன்னதாக அறந்தாங்கி பிரிவு அருகேயுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, அங்கிருந்து கிளம்பி சுமார் 2 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று தேங்காய் உடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, "கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களிலேயே பணப்பட்டுவாடா செய்ய வேண்டும். பாமாயில் இறக்குமதியை நிறுத்தி, கூட்டுறவு அங்காடிகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்.

பட்டுக்கோட்டையை மையமாக கொண்டு தென்னை சார் பொருட்களை மூலதனமாகக் கொண்ட தொழிற்சாலை தொடங்க வேண்டும். வறட்சி மற்றும் நோய் தாக்குதல் போன்ற இயற்கையால் பாதிக்கப்படும் மரங்களுக்கு தலா 2, 500 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காய் பாலில் தாய்ப்பாலுக்கு நிகரான ஊட்டச் சத்து நிறைந்திருப்பதால் அரசே நேரடியாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளையும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதில் மாநில தலைவர் சி.கிருஷ்ணமூர்த்தி, மாநிலச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, மாவட்டத் தலைவர் செல்வம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE