உத்தரப் பிரதேச மாநில கல்வித் துறை மற்றும் சிறப்பு அதிரடிப் படை (STF) நடத்திய ஆய்வில், கடந்த 3 ஆண்டுகளில் போலி ஆவணங்கள் மூலம் அரசுப்பள்ளிகளில் 2,494 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டு கல்வித் துறையில் ஆட்சேர்ப்பு குறித்த பெரும் சர்ச்சை எழுந்த பிறகு, இந்த விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து சிறப்பு அதிரடிப் படை மூலம் முழு அளவிலான விசாரணை நடத்த உத்தரப்பிரதேச மாநில அரசு உத்தரவிட்டது.
அதன்பின்னர், இது தொடர்பாக சிறப்பு அதிரடிப்படை தரவுத்தளங்களை உருவாக்கி, அனைத்து ஆசிரியர்களின் 10 முதல் 12-ம் வகுப்பு, இளங்கலை கல்வியியல் (BEd) மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆகிய படிப்புகளின் அனைத்து ஆவணங்களும் 'மானவ் சம்பதா' என்ற போர்ட்டலில் பதிவேற்றப்பட்டது. இதுவரை மாநிலத்தில் உள்ள 5,59,144 ஆசிரியர்களின் பணி நியமனம் மற்றும் கல்வித் தகுதி தொடர்பான பதிவுகள் மற்றும் ஆவணங்கள் மனவ் சம்பதா போர்ட்டலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்தவுடன் சிலர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தனர். அதன்பின்னர் நடத்திய தீவிர விசாரணையில் அவர்களின் ஆவணங்கள் போலியானது என்று கண்டறியப்பட்டு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி மதிப்பெண் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் தவிர போலி சாதிச் சான்றிதழ்கள், சுதந்திரப் போராட்ட வீரர் சான்றிதழ்கள், ஊனமுற்றோர் சான்றிதழ்கள் மூலமாகவும் மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
அதன்பின், கல்வித்துறையில் பணிபுரியும் போலி ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு, எப்ஐஆர் பதிவு செய்தல், பணி நீக்கம், சம்பளப் பணத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்த விசாரணையின் போது 2,347 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் போலி என கண்டறியப்பட்ட 2,461 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பேசிய சிறப்பு அதிரடிப் படையின் மூத்த அதிகாரி ஒருவர், "இது பனிப்பாறையின் ஒரு முனையாக இருக்கலாம், மாநிலம் முழுவதும் விசாரணை நடத்தப்பட்டால் இதுபோன்ற போலி ஆசிரியர்களின் எண்ணிக்கை இன்னும் பல்லாயிரக்கணக்கானதாக உயரக்கூடும்" என தெரிவித்தார்