பாலியல் வழக்கில் வடிவேலு பட நடிகர் உள்பட இருவருக்கு ஆயுள்தண்டனை: போக்சோ நீதிமன்றம் அதிரடி

By காமதேனு

'எலி' உள்ளிட்ட திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் துணை நடிகராக நடித்த நபருக்கும், டிரை சைக்கிள் ஓட்டுனருக்கும், பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து மதுரை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மதுரையை அடுத்த சோழவந்தான் முள்ளிப்பள்ளம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் பக்தன் என்கிற நாச்சியப்பன்(49). இவர், 'எலி' உள்ளிட்ட திரைப்படங்களிலும் படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் துணை நடிகராக நடித்து உள்ளார்.

இவர், கடந்த 2017-ம் ஆண்டு சிறுமி ஒருவரை ஏமாற்றி மிட்டாய் மற்றும் பலகாரம் வாங்கிக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதனைக் கண்ட தென்கரையைச் சேர்ந்த டிரைசைக்கிள் ஓட்டுநரான மணிகண்டனும்(28) சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சோழவந்தான் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பக்தன் என்கிற நாச்சியப்பன், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், போக்சோ நீதிமன்ற நீதிபதி ராதிகா நேற்று இவ்வழக்கை விசாரித்தார். இவ்வழக்கிற்கு அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார். விசாரணை முடிவில் நாச்சியப்பன், மணிகண்டன் ஆகியோர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், இருவருக்கும் ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE