போதையில் பள்ளி மாணவனைக் கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்: 2 சிறுவர்கள் உள்பட மூன்று பேர் கைது

By காமதேனு

தேனி அருகே போதையில் பள்ளி மாணவனைக் கொன்று கிணற்றில் வீசியதாக 2 சிறுவர்கள் உள்பட மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன். இவரது 16 வயது மகன் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 18-ம் தேதி காணாமல் போனர். இதுகுறித்து அவரது தந்தை ஸ்டீபன், உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் 20-ம் தேதி பாழடைந்த கிணற்றில் சிறுவன் சடலம் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீஸார், அந்த சடலத்தை மீட்டு யார் அநத் சிறுவன் என விசாரணை நடத்தினர். அப்போது அது காணாமல் போன ஸ்டீபன் மகன் என்பது தெரிய வந்தது.

தனது மகன் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஸ்டீபன் புகார் அளித்தார். இதையடுத்து சந்தேக வழக்குப்பதிவு செய்த போலீஸார், இறந்து போன சிறுவனின் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவருடன் இரு சிறுவர்கள் தொடர்பு கொண்டது தெரிய வந்தது. விசாரணையில் பிடிபட்ட சிறுவர்கள், மதுரை செல்லூரைச் சேர்ந்த அல்லாபிச்சை(22) மற்றும் இறந்த ஸ்டீபனின் மகன் நண்பர்கள் என்பது தெரிய வந்தது. கடந்த 18-ம் தேதி சிறுவர்கள் இருவரும் அல்லாபிச்சையுடன் மது அருந்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த ஸ்டீபனின் மகனிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்து உணவு வாங்கி வரச்சொல்லியுள்ளனர்.
ஆனால், அவர்கள் கொடுத்த பணத்திற்கு அவர்கள் கணக்கு கேட்ட போது தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்கள் மூவரும் சேர்ந்து பள்ளிச்சிறுவனை அடித்து கிணற்றில் வீசி கொலை செய்ததாக தெரிவித்தனர். இதையடுத்து மதுரையில் தலைமறைவாக இருந்த அல்லா பிச்சையைச் சுற்றி வளைத்தனர். அவர்கள் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அல்லா பிச்சையை தேனி மாவட்ட சிறையிலும், சிறுவர்கள் இருவரையும் மதுரையில் உள்ள சிறார் சீர்திருத்த மையத்திலும் போலீஸார் நேற்று அடைத்தனர்.‌

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE