கருத்து வேறுபாடால் மனைவி பிரிந்த சோகம்:ராணுவவீரர் எடுத்த துயர முடிவு

By காமதேனு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே விடுமுறைக்கு வந்திருந்த ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காட்டுமன்னார்கோயில் அருகேயுள்ள கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ரகுராமன் ( 35) ராணுவ வீரரான இவர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் பகுதியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த மே மாதம் விடுப்பில் தனது சொந்த ஊரான கண்டமங்கலம் வந்து தங்கியிருந்தார்.

நடுத்தெருவில் இருக்கும் தனது வீட்டில் தனிமையில் தங்கியிருந்தார். இவரது மனைவி இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக இவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதனால் விரக்தியில் இருந்த ரகுராமன் குடிக்க ஆரம்பித்திருக்கிறார். சரியாக சாப்பிடாமல் இருந்து வந்திருக்கிறார். அவரது தந்தை ராஜேந்திரன் அடிக்கடி வந்து ராகுராமனை அழைத்துச் சென்று சாப்பிட வைப்பாராம்.

இந்த நிலையில் நேற்று இரவு ராஜேந்திரனுக்கு சொந்தமான கூரை வீட்டில் ரகுராமன் போர்வையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவரது தந்தை ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காட்டுமன்னார்கோயில் போலீஸார், ரகுராமன் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தேசத்தை காக்கும் ராணுவ வீரர் இப்படி விரக்தியில் தற்கொலை செய்து கொண்டிருப்பது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE