ராஜஸ்தான் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு வாரம் இருமுறை பால் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநில பட்ஜெட்டில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ‘முக்யமந்திரி பால் கோபால் யோஜனா’ திட்டத்தின் கீழ் வாரத்தில் இரண்டு நாட்கள் பால் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்திருந்தார். அரசு பள்ளிகள், மதரஸாக்கள் மற்றும் மதிய உணவு திட்டத்துடன் தொடர்புடைய சிறப்பு பயிற்சி மையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 69.21 லட்சம் குழந்தைகளுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பால் பவுடரில் தயாரிக்கப்பட்ட பால் வழங்கப்படும் என்று கூடுதல் தலைமைச் செயலாளர் பவன்குமார் கோயல் தெரிவித்தார். இந்த நாட்கள் விடுமுறை என்றால் அடுத்த கல்வி நாளில் பால் வழங்கப்படும். 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு 150 மி.லி பாலும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு 200 மி.லி பாலும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் கூட்டுறவு பால் பண்ணை கூட்டமைப்பிலிருந்து இதற்கான பால் பவுடர் கொள்முதல் செய்யப்படும் என்றும் கோயல் தெரிவித்தார்.
இந்த முயற்சியின் மூலம் குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவு, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை மற்றும் வருகை விகிதம் அதிகரிக்கும் என்று ராஜஸ்தான் அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.