தொடர்ந்து சந்தாதாரர்களை இழந்து வருவதால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 300 ஊழியர்களை அதிரடியாக பணியை விட்டு நீக்கியுள்ளது, இது அதன் பணியாளர்களில் 4 சதவீதம் ஆகும்.
நெட்பிளிக்ஸ் நிறுவனம் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது சந்தாதாரர் இழப்பை சந்தித்து வருவதால் கடந்த மாதம் சுமார் 150 பணியாளர்களை நீக்கிய நிலையில், தற்போது மேலும் 300 பேரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.
இது தொடர்பாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இன்று நாங்கள் துரதிர்ஷ்டவசமாக சுமார் 300 ஊழியர்களை விடுவித்துள்ளோம். நாங்கள் வணிகத்தில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு செய்து வரும் நிலையில், எங்களின் மெதுவான வருவாய் வளர்ச்சிக்கு ஏற்ப எங்களின் செலவுகள் அதிகரிப்பதால் இந்த மாற்றங்களைச் செய்துள்ளோம். நெட்பிளிக்ஸ்-க்காக அவர்கள் செய்த அனைத்திற்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்த கடினமான மாற்றத்தின் மூலம் அவர்களுக்கு ஆதரவளிக்க கடினமாக உழைக்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதன் உள்ளடக்கத்தில் இன்னும் சுமார் 17 பில்லியன் டாலர் உட்பட அதிக அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது என அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஸ்பென்சர் நியூமன் தெரிவித்துள்ளார். மேலும், நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக அளவில் கடவுச்சொல் பகிர்வையும் முறியடிக்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் 222 மில்லியன் பணம் செலுத்தும் குடும்பங்களை விட கூடுதலாக, 100 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் கணக்குப் பகிர்வு மூலம் அதன் சேவையைப் பயன்படுத்துகின்றன என்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் கணக்குப் பகிர்வை முறியடித்தால் நெட்பிளிக்ஸின் வருமானம் கணிசமாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.