சரயு நதியில் சல்லாபமா?: மனைவிக்கு முத்தம் கொடுத்த கணவரை ரத்தம் கொப்பளிக்க தாக்கிய கும்பல்!

By ஆர். ஷபிமுன்னா

அயோத்தி சரயு நதியின் புனிதக் குளியலில் பொதுவெளியில் ஒருவர் தன் மனைவிக்கு முத்தம் கொடுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல் அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் தெய்வீக நகரங்களில் ஒன்று அயோத்தி. ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் இந்த ராமஜென்மபூமியில் சரயு நதிஓடுகிறது. இங்கு வரும் பக்தர்கள் முதலில் சரயு நதியில் புனித நீராடிய பின் ஹனுமர் மற்றும் ராமர் உள்ளிட்டக் கோயில்களுக்கு செல்வது வழக்கம்.
சமீபத்தில் பக்தர்கள் சரயு நதியில் புனித நீராடிக் கொண்டிருந்தனர். உ.பியின் ஒரு இளம் தம்பதியரும் நீராடினர். அப்போது, தன் மனைவியுடன் நெருக்கமாக இருந்த கணவர் அவருக்கு முத்தமும் கொடுத்துள்ளார். இதை அருகிலிருந்து பார்த்த சிலர் கோபமடைந்து அந்த வாலிபரைப் பிடித்து நதியின் கரைக்கு இழுத்துச் சென்றனர். புனித நதியில் இந்த ஆபாச நடவடிக்கையில் எப்படிஈடுபடலாம் என சரமாரியாகத் தாக்கத் துவங்கினர். இதனால் பதற்றமடைந்த அவரின் மனைவி மன்னிப்பு கேட்டு தன் கணவரை அந்த கும்பலிடம் இருந்து மீட்டுச் சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தகவல் கிடைத்த அயோத்தி மடங்களின் சாதுக்களும் கோபம் கொண்டுள்ளனர். இதனால் சரயு நதியின் புனிதம் கெட்டுவிட்டதாக ஆலோசனையில் இறங்கினர். இந்த நிலையில், சரயு நதிக்கரையிலிருந்த சிலர் தம்பதியின் நெருக்கமானக் காட்சியை கைபேசியில் பதிவு செய்துள்ளனர். அந்த காட்சிகள் கடந்த 2 நாட்களாக சமூகவலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் ஆக்ராவின் காதல் சின்னமான தாஜ்மகாலின் உள்ளே வெளிநாட்டவர்களால் அவ்வப்போது நடப்பது உண்டு. இதன் மீது நடவடிக்கை எடுக்க அஞ்சிய இந்திய தொல்லியல் துறையினர், அதைத் தடுக்க அங்கு ஒரு காவலரை நியமித்துள்ளது. இதுபோன்ற ஒரு சம்பவத்தில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து எடுத்த நடவடிக்கையால் சுற்றுலாவாசிகள் அங்கு வருவது குறைந்து விட்டதாகக் கருதப்படுகிறது. இதனால், இப்படி சிக்குபவர்களைப் பிடித்து எச்சரித்து அனுப்புகின்றனர். எனினும், முதன்முறையாக சரயு நதி சம்பவத்தில், தம்பதி மீது நயா காட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவாகி விசாரணை நடைபெறுகிறது. இந்த சம்பவம் எப்போது நடைபெற்றது, தம்பதிகள்
யார் என்றும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE