550 ரூபாய்க்காக தோட்டக் காவலாளி அடித்துக் கொலை: பெங்களூருவிற்கு வேலைக்குச் செல்ல இளைஞர்கள் செய்த அதிர்ச்சி செயல்!

By பா.ஜெயவேல்

வேலைக்குச் செல்ல பணம் இல்லாததால் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள், முதியவர் ஒருவரைக் கொன்று அவரிடம் கொள்ளையடித்ததாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள செம்மஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் தேசிங்கு. இவர் அதேபகுதியில் மருத்துவர் ஒருவருக்குச் சொந்தமான சுமார் 13 ஏக்கர் பரப்பளவு கொண்ட தோட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளாகக் காவலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் தந்தையைத் தொடர்பு கொள்ள முடியாததால் அவரது மகன் மேகவண்ணன் என்பவர் அந்த தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்த தந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கேளம்பாக்கம் காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளார். காயங்களுடன் அழுகிய நிலையில் இருந்த தேசிங்கு உடலைக் கைப்பற்றி போலீஸார் உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் ரத்தக் கறையுடன் இருந்த சுத்தியலை காவல்துறையினர் கைப்பற்றினர்.

மேகவண்ணனிடம் நடைபெற்ற விசாரணையில், தனது தந்தைக்கு வேறு யாருடனும் முன்விரோதம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர். அழுகிய நிலையில் உடல் கைப்பற்றப்பட்டதால் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பான சிசிடிவி பதிவுகளைக் காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

அப்போது வழக்கமாகச் செல்லும் தேநீர் கடைக்குச் சென்று தேசிங்கு டீ குடித்ததும், அடுத்த அரை மணி நேரத்தில் சந்தேகத்திற்கு இடமான மூன்றுபேர் அந்த வழியாகச் சென்றதும் தெரியவந்தது. மேலும் அவர்களின் முகம் சரியாகத் தெரியாததால் அவர்களைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து காணாமல் போன அவரின் செல்போன் என்னைத் தனிப்படையினர் கண்காணிக்கத் தொடங்கினர். அதில் தேசிங்கிற்கு தொடர்பு இல்லாத ஒரு எண்ணுக்கு அந்த எண்ணிலிருந்து அழைப்பு விடுத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற புலன் விசாரணையில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சின்னதம்பி, பாண்டி, பாலாஜி ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், வேலை தேடுவதற்காகப் பெங்களூரு செல்ல பணம் இல்லாததால் திருட்டு, வழிப்பறிகளில் அவர்கள் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்தது. மேலும், கடந்த 6-ம் தேதி தோட்டத்தில் தனியாக இருந்த காவலாளி தேசிங்குவிடம் மூவரும் சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளதும், பணம் கொடுக்காத ஆத்திரத்தில் அவரது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த 550 ரூபாயைப் பறித்துக் கொண்டு அருகிலிருந்த சுத்தியலால் அவர் தலையில் அடித்துக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே அவர்கள் மீது திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE