'அதிருப்தியாளர்கள் பாஜகவுடன் இணையுங்கள்; நாங்கள் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவோம்': கொந்தளிக்கும் சிவசேனா எம்.பி

By காமதேனு

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் விசுவாசியும், சிவசேனா எம்பியுமான சஞ்சய் ராவத், "அதிருப்தியாளர்கள் பாஜகவுடன் இணையுங்கள்; நாங்கள் சிவசேனாவை மீண்டும் கட்டியெழுப்புவோம்" என்று சவால் தெரிவித்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான உறுப்பினர்கள் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

சிவசேனா கட்சியை பிளவுபடுத்துவதற்கு தேவையான எண்ணிக்கையை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான திரட்டி வருவதால், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாமல் சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிரா மாநில அரசு கவிழும் நிலையில் உள்ளது.

இந்த சூழலில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக தொடர்வாரா என்ற கேள்விக்கு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சஞ்சய் ராவத், "எல்லா எம்எல்ஏக்களும் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வரட்டும், பிறகு பார்ப்போம். இங்கிருந்து வெளியேறிய இந்த எம்எல்ஏக்கள் மகாராஷ்டிராவுக்குள் திரும்பிச் செல்வது கடினம் என்பதை உணர்வார்கள். கட்சியும், மாநிலமும் உத்தவ் தாக்கரேவுடன் உள்ளன. சில எம்.எல்.ஏ.க்கள் வெளியேறியதால் கட்சி போய்விட்டது என்பதல்ல. பால்தாக்கரேவின் காலத்திலும், நிறைய பேர் கட்சியை விட்டு வெளியேறினர், நாங்கள் கட்சியை மீண்டும் கட்டியெழுப்பினோம், அதை இப்போது ஆட்சிக்கும் கொண்டு வந்தோம். இப்போது உத்தவ் தாக்கரே மற்றும் எனக்கு இது ஒரு வெளிப்படையான சவால், கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவோம்; நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்" என தெரிவித்தார்

மேலும், "கட்சி மற்றும் அரசாங்கத்தின் ஒவ்வொரு முடிவுகளிலும் ஏக்நாத் ஷிண்டே ஒரு பகுதியாக இருந்தார். கட்சியிலும், மாநில அமைச்சரவையிலும், தலைவர்களையும் தொண்டர்களையும் ஒன்றாக வைத்துக் கொள்வதற்காகவே அவருக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டன. உத்தவ் தாக்கரேவால் மட்டுமே அனைத்தையும் செய்ய முடியாது; இது ஒரு கூட்டுப் பொறுப்பு. ஏக்நாத் ஷிண்டே அவரது கடமையைச் செய்வதற்குப் பதிலாக, கடசியில் பிளவை உருவாக்கியுள்ளார்

கடந்த 56 ஆண்டுகளில் பல போராட்டங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். இப்போது ஒருவேளை நாங்கள் ஆட்சியை இழக்க நேரிடலாம், அமைச்சர் பதவியை இழக்க நேரிடலாம், அரசியலில் வேறு என்ன நடக்கும்? எங்களுக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் மற்றும் சிபிஐ ஆகியவற்றை தவறாகப் பயன்படுத்தி எங்களை சிறையில் அடைப்பீர்கள்... என்ன இன்னும் எங்களைச் சுடுவீர்களா? நாங்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டோம், நாங்கள் எதற்கும் பயப்படுவதில்லை" என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE