கன்னியாகுமரி மாவட்டம், முட்டத்தில் நடந்த இரட்டைக் கொலைக் குற்றவாளி கைது செய்யப்பட்டார். தமிழ் திரைப்படங்களில் வருவதுபோல் போலீஸார் இவ்வழக்கில் ஒரு மங்கிக் குல்லாவை வைத்தே குற்றவாளியைக் கைது செய்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் குழந்தை தூய யேசுதெருவைச் சேர்ந்தவர் ஆன்றோ சகாய ராஜ். இவரது மனைவி பவுலின் மேரி(48). ஆன்றோ சகாயராஜூம், அவரது மூத்த மகனும் வெளிநாட்டில் வேலைசெய்து வருகின்றனர். இளைய மகன் சென்னையில் கல்லூரி படித்து வருகின்றார். இதனால் வீட்டில் பவுலின்மேரிக்கு துணையாக அவரது தாயார் தெரசம்மாள் இருந்தார். கடந்த 6-ம் தேதி தெரசம்மாளும், பவுலின் மேரியும் கொலை செய்யப்பட்டிருந்தனர். வீட்டிலேயே இருவரும் கொல்லப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்து 15 பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதனால் நகையைக் கொள்ளையடிப்பதற்காக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என போலீஸார் விசாரித்து வந்தனர்.
இது தொடர்பாக வெள்ளிச்சந்தை போலீஸார் விசாரித்துவந்த போது, கொலையாளி பயன்படுத்திய குரங்கு குல்லா கிடைத்தது. அதை மையமாக வைத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இந்த விவகாரத்தில் ஐந்து தனிப்படைகளும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த இரட்டைக்கொலை தொடர்பாக கடியப்பட்டிணத்தைச் சேர்ந்த அமலசுமன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அமலசுமன் போலீஸாருக்குக் கொடுத்த வாக்குமூலத்தில், “நான் மீன்பிடித்தொழில் செய்துவருகிறேன். இப்போது சூரப்பள்ளத்தில் இருக்கும் நான் சொந்த ஊரான கடியப்பட்டிணத்திற்கு அடிக்கடி செல்வேன். அப்படி செல்லும்போது, பவுலின் வீடு வழியாகத்தான் செல்வேன். அவரது தையல் வகுப்புக்கு வந்த இளம்பெண் ஒருவரைக் கேலி செய்தேன். இதை பவுலின் தட்டிக்கேட்டதால் அவரைத் தீர்த்துகட்ட முடிவுசெய்தேன். அதன்படி அவர் வீட்டில் முதலில் மின்சாரத்தை துண்டித்தேன். ஆனாலும் இன்வெர்டர் இருந்ததால் விளக்கு எரிந்தது. வீட்டில் கதவைத் தட்டினேன். பவுலின்மேரி திறந்ததும் அவரைச் சுத்தியலால் அடித்துக் கொன்றேன். தொடர்ந்து வந்த அவரது அம்மா தெரசம்மாளையும் சுத்தியலால் அடித்துக்கொன்றேன். எனது மங்கி குல்லா கிடைத்ததால் போலீஸூக்குப் பயந்து தலைமறைவானேன். ஆனாலும், போலீஸார் என்னைக் கைது செய்துவிட்டார்கள் ”என்றார். இளம்பெண்ணை கேலி செய்ததைத் தட்டிக் கேட்டதற்கு இருவரைக் கொலை செய்த சம்பவம் குமரி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.