சொந்த மாநிலத்தில் சுமார் அரை கோடி மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்க, அவர்களை கண்டுகொள்ளாது இன்னொரு மாநிலத்தின் ஆட்சியை கவிழ்ப்பதில் மும்முரமாக இருப்பதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார் ஒரு முதல்வர். வடகிழக்கு மாநிலங்களின் பாஜக முகமாக வளர்ந்து வரும், அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா இந்த பெருமைக்கு சொந்தக்காரர்!
மகாராஷ்டிர மாநிலத்தை ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணியின் சார்பில் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே முதல்வராக இருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடனான இந்த கூட்டணி, மத்தியில் ஆளும் பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த சிவசேனா, முதல்வர் பதவிக்கான மோதலில் பாஜகவை கழற்றிவிட்டது. இதனால் ஒரே சித்தாந்ததம் கொண்ட இந்த 2 கட்சிகளும் தீவிர அரசியல் வைரிகளாக மாறின.
இதனை உறுதிசெய்யும் வகையில், மகாராஷ்டிராவைத் தொடர்ந்து உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில், 2024 மக்களவை தேர்தலை குறிவைத்து சிவசேனா கட்சி களமிறங்கியுள்ளது. பாஜக முன்னிறுத்தும் இந்துத்துவாவை இன்னும் வீரியமாக கொண்டே வளர்ந்திருக்கும் சிவசேனாவின் முனைப்பையும் எதிர்ப்பையும் சமாளிக்க முடியாது பாஜக தடுமாறுகிறது. மேலும், இந்துத்துவா உரிமை கோரலில் ஒரே உறையில் 2 கத்திகள் சாத்தியமில்லை என தீர்மானித்தது. அதன் அடிப்படையில் பாஜக சார்பிலான அரசியல் உள்ளடி வேலைகள் மகாராஷ்டிர மாநிலத்தில் மையம் கொண்டன.
சிவசேனா கட்சியின் அடுத்தகட்ட தலைவரான ஏக்நாத் ஷிண்டே, முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு எதிராக திடீரென போர்க்கொடி உயர்த்தியுள்ளார். உண்மையான சிவசேனா நாங்கள்தான் என்று முழங்கியபடி கணிசமான கட்சி எம்எல்ஏ-க்களுடன் குஜராத்தில் அவர் அடைக்கலமானார். அங்கிருந்தபடி உத்தவ் தாக்கரேக்கு எதிராகவும் பாஜகவுக்கு ஆதரவாகவும் முழங்கி வருகிறார்.
கூட்டணி கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளால் ஆளும் சிவசேனா ஆட்சிக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருவதாக, ஊரறிந்த ரகசியத்தை பகிரங்க அரசியலாக்கினார். எனவே, பழையபடி பாஜக கூட்டணிக்கு மாற வேண்டுமென்று முதல்வர் உத்தவ் தாக்கரேவை நிர்பந்திக்க ஆரம்பித்தார். மேலும், பாஜக ஆதரவுடன் தனது தலைமையிலான ஆட்சியை மகாராஷ்டிராவில் அமைக்கவும் ஏக்நாத் ஷிண்டே காய் நகர்த்தி வருகிறார்.
இன்னொரு பக்கம், குஜராத்தின் சூரத் நகர் சொகுசு விடுதியில் தங்கியிருந்த சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்களால் மாநிலத்தை ஆளும் பாஜகவுக்கு எதிராக உள்ளூர் அதிருப்திகள் எழுந்தன. சிவசேனா எம்எல்ஏ-க்கள் கடத்தி வரப்பட்டுள்ளதாகவும், குஜராத் மாநில போலீஸாருக்கு இதில் பங்கிருப்பதாகவும் மகாராஷ்டிராவில் இருந்தும் குற்றச்சாட்டுகள் பறந்தன. அதனை உறுதிசெய்வதுபோல சூரத்திலிருந்து தப்பிவந்த நிதின் தேஷ்முக் என்ற சிவசேனா எம்எல்ஏ, தான் கடத்தப்பட்டு மயக்க ஊசி போடப்பட்டதாகவும், இதர எம்எல்ஏ-க்களும் அச்சுறுத்தலில் தவிப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகி வரும் குஜராத், பாஜக, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்களால் எழும் சங்கடங்களை தவிர்க்க முடிவு செய்தது. எனவே, குஜராத்துக்குப் பதில் சாதகமான இன்னொரு மாநிலத்தை பாஜகவின் டெல்லி நிர்வாகிகள் தேடினர். அவர்களுக்கு அசாமில் இருந்து அபயக்கரம் நீட்டினார் அம்மாநில முதல்வரான ஹிமந்த பிஸ்வா சர்மா.
வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் வளர்ச்சிக்காக கடந்த எட்டாண்டுகளாக மெனக்கிட்டு வரும் ஹிமந்த பிஸ்வா சர்மா, கவிழ்ப்பு அரசியலில் கரை கண்டவர். சுமார் 20 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்தவர், மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மத்தியில் அமைந்ததும் அமித்ஷாவை சந்தித்து அக்கட்சியில் ஐக்கியமானார். வட கிழக்கு மாநிலங்களில் பாஜகவை வளர்த்தெடுக்க சகல உபாயங்களையும் இறக்குவதில் ஹிமந்த பிஸ்வா பிரபலமானார்.
கடந்தாண்டு பாஜக தலைமையிலான ஆட்சி அமைய முடிவானதும், முதல்வர் பதவிக்கு முன்நின்ற சர்பானந்த சோனாவாலை தனது டெல்லி லாபியால் சாய்த்து ஹிமந்த பிஸ்வா முதல்வரானார். மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களின் ஆட்சியை தீர்மானிப்பதில் ஹிமந்த பிஸ்வாவின் அணுகுமுறையை மெச்சிய பாஜக தலைமைக்கு, இதர மாநிலங்களின் ஆட்சிக்கவிழ்ப்பு நாடகங்களிலும் அவ்வப்போது சத்தமின்றி உதவுவார்.
இந்த ஹிமந்த பிஸ்வா சர்மா பொறுப்பில் தற்போதைய சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குஜராத்திலிருந்து விமானத்தில் வந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அந்த எம்எல்ஏ-க்கள், குவாஹட்டி சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சூரத்தில் ஒரு எம்எல்ஏ தப்பித்ததை அடுத்து குவஹாட்டி விடுதியைச் சுற்றி அசாம் போலீஸார் பல அடுக்குக் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக ஆதரவிலான ஆட்சியை அமைப்பதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை ஹிமந்த் பிஸ்வா தீவிரமாக பரிசீலித்து வருகிறார். இதற்காக அதிருப்தி எம்எல்ஏ-க்களை சந்தித்து ஆலோசித்தும் வருகிறார். ஹிமந்த பிஸ்வாவின் இந்த முயற்சிகள் பலனளித்தால் டெல்லி அரசியலில் முக்கிய இடம் பிடித்துவிடுவார். ஆனால், எதிர்க்கட்சிகள் மற்றும் மாநில மக்கள் மத்தியில் ஹேமந்தின் தற்போதைய நடவடிக்கைகள் அதிருப்தியை விதைத்துள்ளன.
”கன மழை மற்றும் கடும் வெள்ளத்தில் அசாம் மாநிலம் சிக்கி உள்ளது. சுமார் அரை கோடிக்கும் மேலான குடிமக்கள் உணவு மற்றும் இருப்பிடத்துக்காக தவித்து வருகின்றனர். இவற்றின் மத்தியில் இன்னொரு மாநிலத்தின் ஆட்சிக் கவிழ்ப்பில் அசாம் முதல்வர் மும்முரமாக இருப்பது வெட்கக்கேடானது. அசாம் அரசியல் வரலாற்றில் இது அழியாக் கறையாகும்” என்று மாநிலத்தின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலையில் அடித்துக்கொள்கிறது.
அலட்டிக்கொள்ளாத ஹேமந்த், “அசாமின் கானுயிர் பூங்காக்களை பார்வையிட வந்திருக்கும் விருந்தினர்களை வரவேற்றது குற்றமா? எனது அணுகுமுறைகளால் மத்திய அரசிடமிருந்து ஏராளமான நிவாரண உதவிகள் அசாமுக்கு வரப்போகின்றன” என்று சமாளித்துள்ளார். மேலும், “அசாமுக்கு வந்திருக்கும் 40 எம்எல்ஏ-க்கள் உதவியுடன் பாபாசாகேப் பால் தாக்கரே கனவு கண்ட இந்துத்துவ ஆட்சி விரைவில் மகாராஷ்டிரத்தில் மலரப்போகிறது” என்று பொடி வைத்துள்ளார்.
பெருவெள்ளத்தால் தண்ணீரிலும் கண்ணீரிலும் தவிக்கும் அசாம் மக்களுக்கு முதல்வரின் பெருமிதம் உதவுமா?